
கடலூர்:
கடலூரில் இருந்து போதிய பஸ் வசதியின்றி மாணவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதனால் மாணவர்கள் மணிக்கணக்கில் பஸ் நிலையத்தில் காத்துக் கிடக்கும் அவல நிலை உருவாகி இருக்கிறது.
கடலூரில் உள்ள பள்ளிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களில் 15 ஆயிரம் மாணவர்கள் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வந்து, பல்வேறு பள்ளிகளில் படிக்கிறார்கள். இவ்வாறு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வந்து படிக்கும் மாணவ, மாணவிகள் போதிய பஸ் வசதியின்றித் தவிக்கிறார்கள். காலை நேரத்தில் பல்வேறு ஊர்களில் இருந்தும், பல்வேறு பஸ்களிலும் மாணவர்கள் வந்து விடுவதால், பிரச்னை பெரிதாக உணரப்படவில்லை.
ஆனால் மாலை நேரத்தில் மாணவ, மாணவிகள் தங்கள் ஊர்களுக்கு பஸ்களை பிடித்துச் செல்வதில் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். கடலூர் திருப்பாப்புலியூர் பஸ்நிலையத்திலும், நகரின் சாலைகளில் உள்ள பல்வேறு பஸ் நிறுத்தங்களிலும் மாணவர்கள் பஸ்களுக்காக மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் நிலை, மிகவும் பரிதாபமாக உள்ளது. பஸ்கள் மாணவர்களை புளி மூட்டைபோல் ஏற்றிச் செல்வதும், ஒரு பஸ்ஸில் இடம் கிடைக்காமல், மறு பஸ்சை பிடிப்பதற்கு ஓடோடிச் செல்லும் இளம் சிறார்களின் நிலையும் பரிதாபமாக உள்ளது.
ஏற்கெனவே 100-க்கும் மேற்பட்ட கடைகளால் வணிக வளாகமாக மாற்றப்பட்டு இருக்கும் திருப்பாப்புலியூர் பஸ் நிலையத்தில், மாலை நேரத்தில் பஸ்களுக்கு காத்து நிற்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கூட்டம் நாள்தோறும் காணப்படுகிறது. கடலூரில் இருந்து நகரப் பஸ்கள் அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் 50-ம், தனியார் துறையில் 25 பஸ்களும் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களால் மாணவர்கள் எண்ணிக்கையை எதிர்கொள்ள முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழகப் பொது மேலாளர் உதயசூரியன் கூறியது:
கடலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 80 ஆயிரம் மாணவர்களுக்கு மேல் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 83 ஆயிரம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்பட்டது. நகருக்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மாணவர்கள் பெருமளவில் நகரப் பள்ளிகளில் படிக்கிறார்கள்.மாணவர்கள் பயணிக்கும் காலை, மாலை நேரங்களை தவிர மற்ற நேரங்களில் பஸ்கள் காலியாகத்தான் செல்கின்றன என்றார்.
இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
கடலூரைச் சுற்றி அரசுப் பள்ளிகள் பல சிறப்பாக உள்ளன. அவற்றில் படிக்காமல் நகரப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என்று பலர் விரும்புவதால் இந்தச் சிக்கல் ஏற்படுகிறது.பள்ளிகள் விடும் நேரத்தை மாற்றி அமைத்தால் இப்பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். மாலையில் ஒரே நேரத்தில் அனைத்து பள்ளிகளையும் விடுவதை மாற்றி, வெவ்வேறு நேரங்களில் விடவேண்டும். அனைத்து மாணவர்களும் மதிய உணவு நேரத்தை குறைத்தால், பள்ளிகள் விடும் நேரத்தை மாற்றி அமைத்து விடலாம்.சில பள்ளிகளில் கடந்த ஆண்டு, தலைமை ஆசிரியர்களால் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்தப் பள்ளி மாணவர்கள் நிம்மதியாகச் சென்று வந்தனர் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக