கடலூர்:
கடலூர் நகராட்சிப் பகுதியில், பொதுக் கழிப்பிடங்கள் மற்றும் சுகாதார வளாகங்களுக்குச் செலவிட்ட மக்கள் வரிப்பணம் 128 லட்சம், பாழாய்ப் போய்விட்டது. தற்போது பொது சுகாதாரம் மற்றும் நவீனக் கழிப்பறைகள் குறித்து பெருமளவுக்கு விழிப்புணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிராமப் புறங்களில் வீடுகளில் தனிநபர் கழிப்பறைகள் கண்டிப்பாகக் கட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதற்காக மானியம் மற்றும் கடன் பெருமளவுக்கு வழங்கப்பட்டும் வருகிறது.நகர்ப் புறங்களில் குடிசை வீடுகள் நிறைந்த பகுதிகளில் தனி நபர் கழிப்பறைகள் கட்டுவது சாத்தியமற்றதாக உள்ளது. இதனால் பின்தங்கிய பகுதிகளில் பொதுக் கழிப்பறைகளும் சுகாதார வளாகங்களும் கட்டப்பட்டு வருகின்றன.
ஆனால், இந்த சுகாதார வளாகங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் அனைத்தும் சிதைந்து கிடக்கின்றன. இதற்கு பயனாளிகளின் பொறுப்பற்ற தன்மையும் முக்கிய காரணமாக இருக்கிறது.இதன் விளைவாக சிறிய நகரமான கடலூரில், பல இடங்களில் சாலையோரங்கள், திடல்கள், ரயில்வே தண்டவாளங்களின் ஓரங்கள் எல்லாம் பொதுக் கழிப்பிடங்களாக மாறி, துர்நாற்றத்தையும் சுகாதாரக் கேட்டையும் உருவாக்கி வருகின்றன. நகராட்சி கட்டிக் கொடுத்த பொது சுகாதார வளாகங்கள் பராமரிப்பு இன்றி பாழடைந்து கிடக்கின்றன.
கடலூர் நகராட்சிப் பகுதியில் 2004 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் 127 லட்சத்தில் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன. வாம்பே நிதி உதவித் திட்டம் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவற்றில் இருந்து, 73 லட்சத்தில் 33 பொதுக் கழிப்பிடங்கள், 55 லட்சத்தில் மார்க்கெட் காலனி, அம்பேத்கர் நகர், சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி, எஸ்.ஆர்.காலனி ஆகிய 6 இடங்களில் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன.
மேற்கண்ட பொதுக் கழிப்பிடங்கள் மற்றும் சுகாதார வளாகங்கள் அனைத்தும் பராமரிப்பு இன்றி, பயன்படுத்த முடியாத அளவுக்குப் பாழடைந்து கிடக்கின்றன. இத்திட்டங்களில் செலவிட்ட மக்கள் வரிப்பணம் பாழாகிக் கிடக்கிறது. பணம் வருகிறது என்பதற்காக, சுகாதார வளாகங்களை பிரம்மாண்டமாகக் கட்டிவிடுவதுடன் நகராட்சியின் கடமை முடிந்து விட்டதாக நினைத்து விடமுடியாது. அவற்றை முறையாகப் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் சமூகக் கடமையும் ஒரு நல்லாட்சிக்கு இருக்கிறது.
இதுகுறித்து நகராட்சி உறுப்பினர் சர்தார் கூறுகையில்,
"மேற்கண்ட பொதுக் கழிப்பிடங்கள் மற்றும் சுகாதார வளாகங்கள் மட்டுமன்றி மேலும் பல சுகாதார வளாகங்களும் சிதைந்து கிடக்கின்றன. இவை கட்டப்பட்டதுடன் சரி. அவற்றை யார் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்று, நகராட்சியின் சுகாதார அதிகாரிகள் யாரும், போய் பார்ப்பதில்லை, ஆய்வு செய்வதில்லை. மக்களுக்கு அறிவுரைகள் வழங்கியதில்லை. கட்டி முடிக்கப்பட்ட போதே, சுகாதார வளாகங்களை யார் பராமரிப்பது ? என்ற கேள்வி எழுந்தது. மகளிர் சுயஉதவிக் குழுக்களிடம் ஒப்படைக்கலாம் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதன் விளைவாகத்தான் சுகாதார வளாகங்களுக்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டு இருக்கிறது' என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக