உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 30, 2010

பண்ருட்டி முந்திரிக் கொட்டை: மூட்டைக்கு ஆயிரம் உயர்வு

பண்ருட்டி:]

               எப்போதும் இல்லாத அளவுக்கு முந்திரிக் கொட்டையின் விலை மூட்டைக்கு (80 கிலோ)  ஆயிரம் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் வியாபாரிகள் மட்டுமே லாபம் அடைந்துள்ளதாகவும், விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என்று தெரிய வருகிறது.

               ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் பூப்பூக்கத் தொடங்கும். மே மாதம் இறுதியில் முந்திரிக் கொட்டை அறுவடை முடிந்துவிடும். பண்ருட்டி வட்டத்தில் உள்ள 16900 ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள முந்திரிக் காடுகளில் இருந்து 12 ஆயிரம் மெட்ரிக் டன் முந்திரிக் கொட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே பருவம் தவறிய மழை, புயல், கடும் பனிப்பொழிவு, வெயில் போன்ற  காரணங்களால் முந்திரி மகசூல் குறைந்ததால் விவசாயிகள் பாதிப்படைந்து வந்தனர்.

                இந்நிலையில் பண்ருட்டியில் உள்ள முந்திரி பயிர் பதப்படுத்தும் நிறுவனங்கள் ஐவரி, கானா, நைஜீரியா, சினிபிஷா, பெனின், இந்தோனிஷியா போன்ற நாடுகளில் இருந்து முந்திரிக் கொட்டைகளை இறக்குமதி செய்து அதை பதப்படுத்தி அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். ஆகஸ்ட் மாதம் வரையில்  3 ஆயிரத்து 500 முதல்  4 ஆயிரம் வரை விலை போன 80 கிலோ கொண்ட முந்திரிக் கொட்டை மூட்டை, தற்போது  4 ஆயிரத்து 500-க்கு விலை போகிறது. இதனால் முந்திரி பயிர்களின் விலை உயர்ந்துள்ளது.

இது குறித்து முந்திரி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள்  கூறியது:

சாத்திப்பட்டு ஜெயஜோதி டிரேடர்ஸ் உரிமையாளர் கே.அன்புகுமரன்: 

                ஒரு மூட்டை முந்திரிக் கொட்டை  5 ஆயிரத்து 500 விற்பனை ஆவது மகிழ்ச்சி அளிக்கிறது. காமன்வெல்த் போட்டி, பண்டிகை நாள்கள் வருவதாலும் தேவை அதிகரித்துள்ளதாலும், விளைச்சல் குறைந்ததாலும் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றம் வியாபாரிகளுக்குதான் லாபம்.

கீழ்மாம்பட்டு சி.குப்புசாமி  கூறியது

                  கடந்த 4 ஆண்டுகளாகவே உற்பத்திக் குறைவால் தற்போது விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றம் பெரு விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு லாபம் தரும், சிறு விவசாயிகள் கடன் வாங்கி பயிர்  செய்வதாலும், கொட்டைகளை இருப்பு வைக்க வசதி இல்லாததாலும் உடனே  விற்றுவிடுவதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

கானங்குப்பம் விவசாயி ஆர்.மணிவேல்: 

                விவசாயிகளுக்கு லாபம் இல்லை. சொந்த நிலம் என்பதால் விட மனமில்லாமல் பயிர் செய்ய வேண்டிய நிலை. கூலி, மருந்து என செலவு அதிகம். கடன் வாங்கி பயிர் செய்யும் விவசாயிகள் அறுவடை காலத்திலேயே கொட்டைகளை விற்பனை செய்து கடனை அடைத்து விடுவர், இல்லை என்றால் வட்டி கட்ட முடியாது. மேலும் இருப்பு வைக்க இடம் இல்லாததும் ஒரு குறைதான் என கூறினர். 

                     மேலும் வியாபாரிகள் கொட்டைகளை வாங்கி சேர்த்து வைத்து செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தி விலை ஏற்றம் செய்வதாகவும் பலர் கூறினர். எது எப்படியோ செம்மண் காட்டில் உச்சி வெயிலில் விஷப் பூச்சிகளுக்கு மத்தியில் ஒவ்வொரு கொட்டையாக சேர்த்த விவசாயிக்கு எந்த பலனும் இல்லை என்பதுதான் உண்மை.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior