உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 30, 2010

குறைந்த நீர்.. நிறைந்த மகசூல்...

சிதம்பரம்: 
                குறைந்த அளவு நீரைக் கொண்டு அதிகளவு நெல் சாகுபடி செய்ய வேளாண் ஆராய்ச்சிகள் கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஒரு கிலோ அரிசி உற்பத்தி செய்ய 5 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும் நிலை, குறைந்து வரும் நிலப்பரப்பு மற்றும் தண்ணீரை அடிப்படையாகக் கொண்டு நெல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
                நீர் பற்றாக்குறை ஏற்படும் போது அதிகப்படியான நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனைப் பெருக்க சொட்டுநீர்ப் பாசன ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய சூழலில் கோவை அருகே இலையமுத்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயின் சொட்டுநீர் நிறுவன ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் செய்முறை விளக்கப் பண்ணையில் சொட்டுநீர்ப் பாசனம் வாயிலாக வெற்றிகரமாக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலை. வேளாண் விரிவாக்க உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது:
                  பாரம்பரிய நீர்ப்பாசன முறைகளில் கிடைத்த மகசூலை விட சொட்டுநீர்ப் பாசனத்தில் சாகுபடி செய்த ஜெயின் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் செய்முறை விளக்கப் பண்ணையில்  அதிகமான மகசூல் கிடைத்துள்ளது. பாரம்பரிய பாசன முறையில் ஏக்கருக்கு 3.1 டன் வரை இருந்த நெல் மகசூல் இப்புதிய பாசன முறையில் 3.8 டன்களாக உயர்ந்துள்ளது. மேலும் மிகக் குறைந்த அளவில் நீரைப் பயன்படுத்தி மின்சாரத்தின் பயன்பாட்டை பாதியாக குறைக்கச் செய்துள்ளனர்.

                 இப்புதிய சாகுபடி முறையில் களைகள் கட்டுப்படுத்தப்பட்டு பாரம்பரிய பாசன முறையை விட உற்பத்தி அளவு அதிகரித்துள்ளது. பாலித்தீன் பைகள் அல்லது நெல் உமியை படுக்கையாகக் கொண்டு சொட்டுநீர்ப் பாசனத்தில் நெல் சாகுபடி செய்யப்படுவதால் களைகளின் வளர்ச்சி பெருமளவில் கட்டுப்படுத்தப்படுவதுடன், நீரின் தேவையும் வெகுவாக குறைகிறது. மறுபுறம் சொட்டுநீர்ப் பாசனம் வாயிலாக நெல் சாகுபடி செய்யப்படும் போது அதிகளவு வேளாண் முதலீடுகள் காரணமாக சாகுபடி செலவு அதிகரிக்கிறது.

                பாரம்பரிய முறையில் ஏக்கருக்கு |22,700 வரை நெல்லுக்கு செலவிடப்படுகிறது. சொட்டுநீர்ப் பாசனம் வாயிலாக செய்யப்படும் நெல் சாகுபடிக்கு |31,400 வரை செலவாகிறது. இருப்பினும் அதிகளவு மகசூல் காரணமாக பாரம்பரிய முறையை விட அதிக வருமானம் கிடைக்கிறது சொட்டுநீர்ப் பாசனம் வாயிலாக ஏக்கருக்கு |38 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது. ஒரு முறை அமைக்கப்படும் சொட்டுநீர்ப் பாசன முறையை விவசாயிகள் பத்து பருவ காலங்களுக்கு பயன்படுத்தலாம். 

                எனவே நீண்ட கால அளவில் பார்க்கும் போது குறைந்த நீர், குறைந்த மின்சாரம் மற்றும் சாகுபடிப் பரப்பளவைக் கொண்டு அதிக உற்பத்தி மற்றும் மகசூலைப் பெற முடிகிறது. மேலும் மழை குறைந்த காலத்தில் குறிப்பாக நீர் பற்றாக்குறை ஏற்படும் வறட்சிக் காலத்தில் சொட்டுநீர்ப் பாசனம் வாயிலாக அதிக லாபம் பெற முடியும்.

பிற பயன்கள்: 

                       தற்போது நெல் சாகுபடி பரப்பளவு குறைந்து வரும் சூழலில் தேசிய அளவில் மொத்த நெல் சாகுபடி பரப்பளவான 43.4 மில்லியன் ஹெக்டேரில் 89.31 மில்லியன் டன் வரை உற்பத்தி செய்யப்படுகிறது.

                        இவையல்லாமல் குறைந்த நீர்ப்பாசனம் உள்ள பகுதிகளில் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் 10 சதவீத அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டால் நெல் உற்பத்தியை 130 மில்லியன் டன்கள் வரை பெருக்க முடியும் என வேளாண் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர் .எனவே தமிழக விவசாயிகள் குறைந்த நீர்ப்பாசனம் உள்ள பகுதிகளில் சொட்டுநீர்ப் பாசன முறையைப் பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம். இந்த புதிய சொட்டுநீர்ப் பாசனம் வாயிலாக நெல் சாகுபடி பற்றி தெரிந்து கொள்ள கோவையிலிருந்து 70 கி.மீட்டர் தொலைவில் இலையமுத்தூரில் அமைந்துள்ள ஜெயின் சொட்டுநீர்ப் பாசன ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் செயல்முறை விளக்கப் பண்ணைக்கு விவசாயிகள் சென்று பார்வையிட்டு பயன்பெறலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior