சிதம்பரம்:
குறைந்த செலவில் கூடுதல் மகசூல் தரும் 'ராஜராஜன் 1000' நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ. 3 ஆயிரத்துக்கான இடுபொருள்கள் மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என பரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் இ. தனசேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் இ. தனசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதியில் சுமார் 9 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 'ராஜராஜன் 1000' நெல் சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதை நெல் மட்டும் போதுமானதாகும். ஒரு ஏக்கருக்கு 1 சென்ட் என்ற அளவில் பாய் நாற்றங்கால் விதைப்பு செய்ய வேண்டும். நடவுக்கு 13 முதல் 15 நாள் வயதுடைய இளம் நாற்றுக்களை குத்துக்கு ஒன்று வீதம் 22.5 செ.மீட்டருக்கு 22.5 செ.மீட்டர் என்ற அளவில் சதுர முறையில் நடவு செய்ய வேண்டும்.
இதற்கு மார்க்கர் கருவியை பயன்படுத்தலாம். நடவு வயலில் களை எடுக்க கோனோவீடர் எனும் களைக்கருவியை நட்ட 10-ம் நாள் முதல் 10 நாட்கள் இடைவெளியில் 4 முறை பயன்படுத்த வேண்டும். இக்கருவியை பயன்படுத்துவதால் களைகள் கீழே தள்ளப்பட்டு மக்கி உரமாக பயிருக்கு கிடைப்பதுடன், நல்ல காற்றோட்டமும் பயிருக்கு கிடைக்கும். இலை வண்ண அட்டையை பயன்படுத்தி தேவையானபோது தழைச்சத்தினை பயிருக்கு இட வேண்டும். செம்மை நெல் சாகுபடியில் சாதாரண முறையை விட, 25 சதவீத மகசூல் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் 5 கிராமங்களில் 'ராஜராஜன் 1000' நெல் சாகுபடி செயல் விளக்கத் தளைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் 25 ஏக்கர் பரப்பில் தொகுப்பாக இந்த செயல் விளக்கத்தளைகள் அமைக்கப்படவுள்ளன. அச்செயல் விளக்கத்துக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 3 ஆயிரத்துக்கான இடுபொருள்கள் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது. எனவே, தங்களது நிலங்களில் 'ராஜராஜன் 1000' நெல் சாகுபடி செயல் விளக்கத்தளைகளை அமைக்க விரும்பும் விவசாயிகள், தங்கள் பகுதி வேளாண்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தனசேகர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக