உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 06, 2010

கின்னஸில் இடம்பெறத் தகுதி படைத்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம்


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற வெள்ளிவிழா நிகழ்ச்சியில் பேசுகிறார் இணைவேந்தர் எம்.ஏ.எம். ராமசாமி
 
சிதம்பரம்:
 
                  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற தகுதி உள்ளதாக பத்மபூஷன் விருது பெற்ற பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் என். ரங்கபாஷ்யம் தெரிவித்தார். இப்பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு துறையும் வெள்ளி விழா, வைர விழா, பவள விழாக்களைக் கொண்டாடியதன் மூலம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற தகுதி பெற்றுள்ளதாக அவர் கூறினார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி வெள்ளிவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
 
இதில் டாக்டர் ரங்கபாஷ்யம் மேலும் பேசியது: 
 
                 ஒடுக்கப்பட்ட பகுதியான கடலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த மருத்துவக் கல்லூரியில் அனைத்து வசதிகளும் உள்ளது. அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம், சஞ்சய்காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிகல் சயன்ஸ், மெட்ராஸ் மெடிக்கல் சென்டர் ஆகியவற்றுக்கு இணையான தரத்தில் இந்த மருத்துவக் கல்லூரி நவீன உபகரணங்களுடன் சிறந்து விளங்குகிறது.  இப்போது மருத்துவம் பயிலும் மாணவர்கள் கிராமப்புறங்களில் ஓராண்டு கட்டாயம் பயிற்சி பெற வேண்டும் என இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த மருத்துவக் கல்லூரி கிராமப்புற பகுதியில் அமைந்து அம்மக்களுக்கு பயிற்சி அளிப்பதால் அந்த தகுதியையும் இங்கு பயிலும் மாணவர்கள் பெற்று விடுகின்றனர். 
 
இவ்விழாவில் முன்னாள் துணைவேந்தர்கள், மருத்துவப்புல முதல்வர்கள், மருத்துவமனை முன்னாள் கண்காணிப்பாளர்கள் ஆகியோரை கௌரவித்து இணைவேந்தர் எம்.ஏ.எம். ராமசாமி எம்.பி. கூறியது: 
 
                 அண்ணாமலைப் பல்கலையில் பல் மருத்துவக் கல்லூரியாக தொடங்கப்பட்டு அது மருத்துவக்கல்லூரியாக அமைக்கப்பட்டது. தமிழகத்தில் முதல்முதலாக தொடங்கப்பட்ட 3 மருத்துவக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட பகுதியில் தொடங்கப்பட்டது ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியாகும். பல்வேறு இன்னல்களுக்கிடையே இந்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இக்கல்லூரிகளை அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். இங்கு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தொடங்க மருத்துவர்கள் கொண்ட குழுவை மணிப்பால் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்ட பின்னரே இங்கு மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டது என்றார் இணைவேந்தர். 
 
முன்னாள் துணைவேந்தர் எஸ்.வி. சிட்டிபாபு வாழ்த்துரை வழங்கி பேசியது: 
 
                இந்த மருத்துவமனையில் 27 வகையான வசதிகள் உள்ளது. மேலும் இங்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை அமைக்க வேண்டும். மருத்துவத்துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும், தரம் வாய்ந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் கல்வி பரிமாற்ற ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். முன்னதாக மருத்துவப்புல முதல்வர் டாக்டர் என். சிதம்பரம் வரவேற்றார். 
 
                    பதிவாளர் எம். ரத்தினசபாபதி வாழ்த்துச் செய்திகளை படித்தார். துணைவேந்தர் எம். ராமநாதன் தலைமை தாங்கினார். விழா ஒருங்கிணைப்பாளர் எஸ். ரமேஷ் வெள்ளிவிழா அறிக்கையை படித்தார்.  இந்நிகழ்ச்சியின்போது என். ரங்கபாஷ்யம் பெயரில்  50ஆயிரத்துக்கு இணைவேந்தர் எம்.ஏ.எம். ராமசாமி அறக்கட்டளை ஒன்றை நிறுவியுள்ளதாக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் அறிவித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.விஸ்வநாதன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior