தமிழகத்தில் 45 வயதைக் கடந்த வரலாறு, புவியியல் படித்த பட்டதாரி ஆசிரியர்கள் 15,000 பேர் பணியமர்த்தப்படாமல் உள்ளனர். மற்ற பாட ஆசிரியர்களைப் போல வரலாறு, புவியியல் முடித்த ஆசிரியர்களையும் அதிக அளவில் பணியில் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 30,000 பட்டதாரிகள், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை புள்ளி விவரம் கூறுகிறது. இவர்களில் 90 சதவீதத்தினர் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், உயிரியல் ஆகிய பாடங்களை முதன்மைப் பாடமாகப் படித்த பட்டதாரி ஆசிரியர்களே. ஆனால், வரலாறு, புவியியலை முதன்மைப் பாடமாகப் படித்தவர்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை.
எடுத்துக்காட்டாக, கடந்த 2001-ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில் வட்டார வள மையத்துக்கு ஆசிரியர் பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டனர். அவற்றில் வரலாறு பாடத்தில் 84 பணியிடங்களும், புவியியல் பாடத்தில் 21 பணியிடங்களும் நிரப்பப்பட்டன. 2002-ம் ஆண்டில் இதே திட்டத்தின் கீழ் வரலாறு பாடத்தில் 300 பணியிடங்களும், புவியியல் பாடத்தில் 87 பணியிடங்களும், இதே ஆண்டில் பள்ளி உதவி ஆசிரியர் பணியிடங்களில் வரலாறு பாடத்தில் 91 பணியிடங்களும், புவியியல் பாடத்தில் 23 பணியிடங்களும் நிரப்பப்பட்டன. 2003-ம் ஆண்டில் வரலாறு பாடத்தில் 63 பணியிடங்களும், புவியியல் பாடத்த்தில் 33 பணியிடங்களும், 2004-ம் ஆண்டில் வரலாறு பாடத்தில் 60 பணியிடங்களும், புவியியல் பாடத்தில் 34 பணியிடங்களும் நிரப்பப்பட்டன.
இதேபோல, கடந்த 14.02.2010-ல் வரலாறு பாடத்தில் 92 பணியிடங்களும், புவியியல் பாடத்தில் 25 பணியிடங்களும் மட்டுமே நிரப்பப்பட்டன. இவை அனைத்தும் மத்திய அரசால் நிரப்பப்பட்டவை ஆகும். மற்ற பாடங்களோடு ஒப்பிடும் போது, வரலாறு, புவியியல் பாடத்தில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும், இப் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வாணையம் மூலமாக போட்டித் தேர்வுகள் நடத்தி நிரப்பப்பட்ட்டன. போட்டித் தேர்வுகளில், அண்மையில் படித்து முடித்துவர்கள் சுலபமாக அதிக மதிப்பெண்கள் பெற்று பணி நியமனம் பெற்றனர். ஆனால், 40 வயதைக் கடந்தவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியவில்லை.
இந்நிலையில், தமிழக பள்ளிக் கல்வித் துறை நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் பாட வாரியாக பணி நியமனம் செய்யப்படுவர் என அறிவித்தது. தொடர்ந்து, 09.07.2010 முதல் 27.07.2010 வரை அனைத்துப் பாடங்களிலும் 6,120 பணியிடங்களை நிரப்ப மாநில அளவிலான பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புவியியல் பாடத்துக்கு 119 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. இதனால், புவியியல், வரலாறு படித்த ஆசிரியர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் நிரப்பப்பட்ட 30,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், வரலாறு பாடத்தில் 1,232, புவியியல் பாடத்தில் 342 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
புவியியலை முதன்மைப் பாடமாகப் படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 1992-ம் ஆண்டில் பதிவு செய்து காத்திருக்கும் எம். செல்வம் (45) கூறியது:
அதிமுக ஆட்சியில் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் இளம் வயதுடைய ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு கிடைத்தது. அப்போதும் வரலாறு, புவியியல் பணியிடங்களில் குறைவான ஆசிரியர்களே நியமிக்கப்பட்டனர். தற்போது திமுக ஆட்சியில் மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்து வருகின்றனர். மற்ற பாடங்களில் ஏறத்தாழ 2005-ம் ஆண்டு வரை பதிவு செய்தவர்கள் பணிக்கு சென்று விட்ட நிலையில், புவியியல் பாடத்தைப் படித்தவர்களில் தாழ்த்தப்பட்டவர்கள் 1995-ம் ஆண்டு வரையிலும், பிற்படுத்தப்பட்டவர்கள் 1990-ம் ஆண்டு வரையிலும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 1993-ம் ஆண்டுவரையில் தான் பணி நியமனம் பெற்றுள்ளனர்.
இரு பாடங்களிலும் சுமார் 15,000 பேர் 45 வயதைக் கடந்த நிலையில் உள்ளோம். எனவே, வரலாறு, புவியியல் பாட ஆசிரியர்களை அதிக எண்ணிக்கையில் நியமனம் செய்ய தமிழக அரசு முன் வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நவம்பர் 10-ம் தேதி முதல் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக