உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 28, 2010

"கோ கோ' தென்னந்தோப்பு விவசாயிகளின் வரப்பிரசாதம்



      
                     நிழல் ஊடு பயிரான கோ கோ தோட்டம், தென்னந்தோப்பு வைத்துள்ள விவசாயிகளுக்கு செலவில்லாமல் அதிக லாபம் தரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சாக்லேட் முதல் ஐஸ் கிரீம் வரை அனைத்திலும் கலக்கப்படுவது கோ கோ. மேலும் மருத்துவத்துக்கும், முக அழகு கிரீம்களில் கலக்கவும் கோ கோ பவுடர் பயன்படுகிறது.  
 
                   இந்தியாவில் கோ கோ தோட்டப்பயிர் குறைவாக உள்ளதால் பிரேசில், மெக்சிகோ, கானா, நைஜீரியா, இந்தோனேஷியா, கேமரூன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 60 சதவீத கோ கோ இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.  இந்த கோ கோ தோட்டப்பயிர் கோவை, திருச்சி போன்ற தமிழகத்தின் ஒரு சில மாவட்டத்தில் மட்டும் பயிரிடப்படுகிறது.  
 
                      திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் முதலாக மப்பேடு பகுதியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விஜயகுமார் தோட்டக்கலை வேளாண் உதவி அலுவலரின் ஆலோசனைப்படி கோ கோ பயிரிட்டு லாபம் அடைந்து வருகிறார்.  
 
இந்த கோ கோ தோட்டம் குறித்து தோட்டக்கலை வேளாண் உதவி அலுவலர் பாபு கூறும் போது, 
 
                          கோ கோ செடி வளர 60 சதவீத நிழல் பகுதி தேவை. மேலும் 15 முதல் 39 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை, மழையளவு 500 முதல் 2000 மில்லி மீட்டர் வரை, வடிகால் வசதி கொண்ட செம்மண் மற்றும் வண்டல் மண் ஆகியவை இருந்தால் போதுமானது. 
 
                     மேற்கண்ட சூழல் பெரும்பாலும் தென்னந்தோப்புகளில் நிலவும். ஆகையால் தென்னந் தோப்பு வைத்திருப்பவர்கள் ஊடு பயிராக கோ கோ பயிரை நடவு செய்யலாம்.  இதற்கென தனியாக எவ்வித பராமரிப்பும் இல்லை. தென்னந்தோப்புக்கு விடப்படும் தண்ணீரே இதற்கும் போதுமானது. இதற்கு சொட்டு நீர் பாசன வகையையும் பின்பற்றலாம். இரண்டு தென்னை மரங்களுக்கு நடுவில் ஒரு கோ கோ அல்லது 10 அடி இடைவெளியில் ஒரு கோ கோ செடி என பயிரிடலாம். ஒரு ஏக்கர் தென்னந் தோப்பில் 200 முதல் 250 செடிகள் வரை பயிரிடலாம்.  
 
                    கோ கோ பயிர் நடவு செய்த 3 ஆண்டுகளில் பலன் கொடுக்கும் ஆற்றல் உள்ளது. 3 ஆண்டு வளர்ந்து ஒரு செடியில் 750 கிராம் கோ கோ கிடைக்கும். 5 ஆண்டு வளர்ந்த செடியில் 2 கிலோ கோ கோ கிடைக்கும். கோ கோ பொறுத்தவரையில் குறைந்தபட்ச ஆதார விலையைக் கருத்தில் கொண்டாலும் ஆண்டுக்கு ரூ. 18 ஆயிரம் முதல்  ரூ. 24 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட முடியும்.  மேலும் கோ கோ செடியில் இருந்து விழும் இலையில் தழைச்சத்து நுண்ணூட்டச்சத்து போன்றவை இருப்பதால் மண் வளம் பெற்று தென்னை மரமும் நல்ல அறுவடையை தரும். 
 
                  கோ கோ செடி வகைகளை பூச்சியினங்களும் தாக்காது. ஆகையால் தென்னந்தோப்பு விவசாயிகளுக்கு கோ கோ ஒரு வரப்பிரசாதமாகும். 
 
                   இந்த நிழல் ஊடுபயிரான கோ கோ பயிரிட விருப்பமுள்ள விவசாயிகள் 9444227095 என்ற மொபைல் எண்ணில் அழைத்தால் தோட்டக் கலைத் துறை மூலம் அவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் மற்றும் உதவிகள் கிடைக்கும் என்றார் பாபு.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior