நெய்வேலி:
என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கைத் தொடர்பாக நிர்வாகத்திற்கும், அதன் அங்கீகரிக்கப்பட்டத் தொழிற்சங்கமான தொமுசவிற்கும் இடையே சென்னையில் புதன்கிழமை உடன்பாடு ஏற்பட்டது. இதை அடுத்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை முதல் பணிக்குத் திரும்புவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் சமவேலைக்கு சமஊதியம் வழங்க வலியுறுத்தி செப்டம்பர் 19 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தொமுச, என்எல்சி நிர்வாகத்துடன் அக்டோபர் 10-ம் தேதி ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால், இதர தொழிற்சங்கங்களான பாமக தொழிற்சங்கம், ஏஐடியுசி, அதிமுக தொழிற்சங்கம், சிஐடியு, எல்எல்எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்கைத் தொடர்ந்தன.
போராட்டம் தீவிரமடைந்த நிலையில் பாமக எம்எல்ஏ வேல்முருகன் தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் தமிழக முதல்வர் கருணாநிதியை செவ்வாய்க்கிழமை சந்தித்து பிரச்னைக்கு தீர்வுகாண உதவுமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து முதல்வர் முயற்சி மேற்கொண்டு மத்திய அரசுடன் பேசி, என்எல்சி நிர்வாகத்துடன் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ததையடுத்து, புதன்கிழமை சென்னையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இப்பேச்சுவார்த்தையில் நாளொன்றுக்கு ரூ. 40- ஆக இருந்த ஊதியம் ரூ. 60 ஆகவும், சிறப்பு போனஸ் ரூ. 500-லிருந்து ரூ. 1000-ஆகவும் உயர்த்தப்பட்டது. இதர கோரிக்கைகள் ஏற்கனவே தொமுசவுடன் செய்துகொண்டது தொடரும் என நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து 38 நாள்களாக நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக சிஐடியு சங்கத் தலைவர் குப்புசாமி தெரிவித்தார். வேலைநிறுத்தம் வாபஸ் எனக் கூறப்பட்டாலும் 65 சதவீத தொழிலாளர்கள் ஏற்கெனவே பணிக்குத் திரும்பிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக