தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில், பதிவு செய்யக் கோரி இளைஞர்களிடம் தினமும் பெறப்படும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் கட்டுக் கட்டாகக் குவிந்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் மின் ஆளுமை மயமாக்கும் திட்டத்தை ரூ.5.06 கோடியில் செயல்படுத்த அரசு அனுமதி அளித்தது. இதற்காக, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த மென்பொருள்கள் முடக்கப்பட்டன.
வேலைவாய்ப்பு பதிவு, புதுப்பித்தல், முகவரி மாற்றம், கூடுதல் கல்வி தகுதி பதிவு உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, ஆன்லைன் முறையில் பதிவு செய்யும் புதிய நடைமுறை கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. வேலைவாய்ப்புத் துறைக்காக பிரத்யேக இணையதள முகவரியும் வெளியிடப்பட்டது. ஆனால், சர்வர் பிரச்னை உள்ளிட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இதுவரை இந்த இணையதளம் செயல்படவில்லை. ஆன்லைன் பதிவு சேவையும் கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக முடங்கிய நிலையில் உள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை இப்போது 70 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்த நிலையில், புதிதாக பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தினமும் ஏராளமான இளைஞர்களும், பெண்களும் குவிகின்றனர். ஆனால், பெரும்பாலான கணினிகள் செயல்படாததால், பதிவு செய்தல் உள்ளிட்ட அன்றாடப் பணிகளைக் கூட செய்ய முடியவில்லை. இதனால், வேலைவாய்ப்புத் துறை அலுவலர்கள் தவிக்கும் நிலை தொடர்கிறது.
இதையடுத்து, வேலைவாய்ப்பு பதிவு கோரி வருவோரிடம் விண்ணப்ப மனுவையும், அஞ்சல் தலையுடன் கூடிய சுய முகவரியிடப்பட்ட கடித உறைகளும் பெறப்படுகின்றன. இந்த விண்ணப்பங்கள் குறித்த விவரங்கள் எதுவும் பதிவேடுகளில் பதிவு செய்யப்படுவது இல்லை. ஏற்கெனவே, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 387 காலியிடங்களை நிரப்பாத நிலையில், இப்போது விண்ணப்பங்கள் குவிவது, கூடுதல் பணிச் சுமையாக அதிகரித்துள்ளது. போதிய இடவசதி இல்லாததால், கட்டுக் கட்டாக குவிந்துள்ள விண்ணப்பங்களைப் பராமரிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மீண்டும், மீண்டும் விண்ணப்பங்களைப் பெறுவது கண் துடைப்பாக மாறி வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக