பண்ருட்டி:
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பண்ருட்டி பஸ் நிலையத்தில் கால்நடைகளும், தெரு நாய்களும் சுற்றித் திரிவதால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
வியாபார நகரமான பண்ருட்டியில் மளிகை, காய்கறி மொத்த வியாபாரமும், முந்திரி பதப்படுத்தும் மற்றும் ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலைகளும் ஏராளமாக உள்ளன. இதனால் பண்ருட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்களும், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் நாள்தோறும் பண்ருட்டிக்கு வந்து செல்வதால் பஸ் நிலையம் எப்போதும் கூட்டமாக இருக்கும். பண்ருட்டி பஸ் நிலையத்தில் பயணிகள் நிழற்குடையின்கீழ் பலா, வாழை, கொய்யா உள்ளிட்ட பழக் கடைகளும், பஸ் நிலையத்தின் உள்பகுதியில் சிற்றுண்டி கடைகளும் உள்ளன. இ
த்தகைய கடைகளில் இருந்து வீசப்படும் கழிவுகளை உண்பதற்காக கால்நடைகளும், தெரு நாய்களும் பஸ் நிலையத்துக்குள் சுதந்திரமாக சுற்றி வருகின்றது. இவ்வாறு சுற்றித்திரியும் கால்நடைகளும், தெரு நாய்களும் இரை எடுப்பதில் ஏற்படும் போட்டியால் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றன. அடிக்கடி இதுபோல் நிகழ்வதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பஸ் நிலையத்தில் சுற்றித்திரியும் கால்நடைகளையும், தெரு நாய்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என பலர் புகார் தெரிவித்தும் நகர மற்றும் மாவட்ட நிர்வாகம் இதைக் கண்டுகொள்ளவில்லை.
மேலும் பண்ருட்டி பஸ் நிலையத்தில் பயணிகள் ஓய்வறை, உட்கார வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், இலவச கழிப்பறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இந்நிலையில் கால்நடைகள், நாய்களின் தொல்லை வேறு. எனவே பொதுமக்களின் நலன்கருதி கால்நடைகளும், நாய்களும் பஸ் நிலையத்துக்குள் வராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக