பண்ருட்டி:
பண்ருட்டியில் ரேஷன் கடை முன் சாக்கடைநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதால் ரேஷன் கடைக்கு வருபவர்களும், அப்பகுதியில் குடியிருப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
பண்ருட்டி லட்சுமிபதி நகர் 18-வது வார்டில் வடகைலாசம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாய விலைக் கடை உள்ளது. 1700 ரேஷன் கார்டுகளைக் கொண்டுள்ள இந்த ரேஷன் கடையில் மேலப்பாளையம், லட்சுமிபதி நகர், வி.எஸ்.பி.நகர், லிங்க் ரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பயன் அடைகின்றனர். இப்பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளதால் வீடுகளும், குடியிருப்புகளும் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
ரேஷன் கடை அருகே உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல கால்வாய் இல்லாததால், ரேஷன் கடை முன் தேங்கி நிற்கின்றது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் ரேஷன் கடைக்கு வருபவர்கள், அவ்வழியே செல்லும் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர். மேலும் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், கழிவுநீரில் உற்பத்தியாகும் நோய் கிருமிகளால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து ரேஷன் கடைக்கு வந்தவர்கள் கூறியது:
கடைக்கு முன் சாக்கடைநீர் தேங்கி நிற்கின்றது. இதில் நடந்து சென்றுதான் பொருள்களை வாங்கி வருகின்றோம். இதை சரி செய்ய யாரும் முன்வரவில்லை எனக் கூறினர்.
வடகைலாசம் கூட்டுறவு சங்கச் செயலர் ஆனந்தன்:
கடை முன் சாக்கடைநீர் தேங்கியுள்ளதால் அண்மையில் இரண்டு வண்டி மண் அடித்து சரி செய்தேன். மழையில் மண் அடித்துச் செல்லப்பட்டதால் மீண்டும் கழிவுநீர் தேங்கி உள்ளது.
வார்டு கவுன்சிலர் ரமாதேவி ராமலிங்கம்:
இந்த பகுதியில் நான்கு பள்ளிகள் உள்ளதால் ஏராளமான வீடுகள் உள்ளன. ஆனால் கழிவுநீர் கால்வாய் இல்லை. ரேஷன் கடை முன் தேங்கி உள்ள சாக்கடைநீரையாவது சரி செய்து தரும்படி பலமுறை நகர நிர்வாகத்திடம் கூறியும் அவர்கள் முன்வரவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக