சிதம்பரம்:
:கடலூர் மாவட்டத்தில் உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முறைகேட்டில் ஈடுபட்டதாக விற்பனையாளர் ஒருவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டத்தில் தமிழக உணவு பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் க. பாலசந்திரன் அதிகாரிகளுடன் சென்று ரேஷன் கடைகளில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிதம்பரத்தை அடுத்த ஆடூர் அகரம் கடையில் ஆய்வு செய்த போது எடை குறைவு, இருப்பு குறைவு போன்ற முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது. இதனால் அக்கடை விற்பனையாளர் அர்ச்சுனனை தற்காலிகப் பணிநீக்கம் செய்து ஆணையர் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து வடக்குத்து பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கினை கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமனுடன் சென்று தணிக்கை மேற்கொண்டார். அங்கு அத்தியாவசியப் பொருள்கள் சரியான வழித்தடங்களில் செல்கிறதா என ஆய்வு செய்தார்.
பின்னர் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுவிநோயக திட்டத்தின் கீழ் பொருள்களை சிறந்த முறையில் செயல்படுத்த அதிகாரிகளுக்கு பாலச்சந்திரன் அறிவுரை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி எஸ். நடராஜன், இணைப்பதிவாளர் (கூட்டுறவு) வெங்கடேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜன், துணைப்பதிவாளர் (பொதுவிநியோகம்) மகபூப், மண்டல மேலாளர் சேகர் மற்றும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக