உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, அக்டோபர் 24, 2010

கடலூர் திருப்பாப்புலியூர் ரயில்வே கேட் பிரச்னை: போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிப்பு


கடலூர் திருப்பாப்புலியூர் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்.
 
கடலூர்:
 
               கடலூர் நகரில் மையப் பகுதியில் அமைந்து இருக்கும் திருப்பாப்புலியூர் ரயில்வே கேட் பிரச்னையால், போக்குவரத்தில் மேலும் சிக்கல் அதிகரித்து வருகிறது.விழுப்புரம்- மயிலாடுதுறை மார்க்கத்தில் மீட்டர் கேஜ் பாதை இருந்தபோது, கடலூர் திருப்பாப்புலியூர் ரயில்வே கேட் ஒரு நாளுக்கு 40 முறை மூடித் திறக்கப்பட்டது. 
 
                    அகலப் பாதைத் திட்டம் நிறைவேற்றப்படும்போது, திருப்பாப்புலியூர் ரயில்வேகேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் பொது நல அமைப்புகளின் போராட்டம் மற்றும் கடலூர் மக்களவை உறுப்பினர் கே.எஸ். அழகிரியின் முயற்சியால் ரயில்வே சுரங்கப் பாதைக்கு டெண்டர் விடப்பட்டு 2 மாதங்கள் ஆகின்றன. ஆனால் தமிழக நெடுஞ்சாலைத் துறை தனது பங்கைச் செய்வதில் இன்னமும் ஆர்வம் காட்ட வில்லை என்று பொது நல அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.பொது நல அமைப்புகள் ஏராளமான போராட்டங்களை நடத்தியும், வர்த்தகர்களின் ஒரு பிரிவினரின் சுயநலம் அடிப்படையிலான எதிர்ப்பு காரணமாக, தமிழக நெடுஞ்சாலைத் துறை, சுரங்கப்பாதைப் பணிக்கு டெண்டர் விடாமல் இழுத்தடித்து வருவதாக, கடலூர் பொது நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் எம்.நிஜாமுதீன் குற்றம் சாட்டி வருகிறார்.
 
              உள்ளாட்சி மற்றும் அரசுப் பொறுப்பில் இருக்கும் ஆளும் கட்சிப் பிரதிநிதிகளும் இப்பிரச்னையில் முனைப்புக் காட்டாததே, சுரங்கப்பாதை பணியில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதற்கு, முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடலூர் சிதம்பரம் மார்க்கத்தில் ரயில்கள் இயக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 20 நாள்களாக இந்த வழியாகச் செல்லும் சரக்கு ரயில்களின் எணணிக்கையும் அதிகரித்து உள்ளது.
 
                   இதன் விளைவாக ஏற்கெனவே ஆக்கிரமிப்பால் சுருங்கிப்போன லாரன்ஸ் சாலையில், தற்போது ரயில்வே கேட் அடிக்கடி மூடித் திறப்பதால், பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள்.புதிதாகக் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் வழியாக பெரும்பாலான வாகனங்களை திருப்பி விடும் முயற்சியிலும் போலீஸôர் கவனம் செலுத்தாததும் ரயில்வேகேட் பிரச்னையை மேலும் சிக்கலாக்கி வருகிறது.
 
                     லாரன்ஸ் சாலையிலும், நகரின் மையப் பகுதியிலும் போக்குவரத்து நெரிசலைப் போக்க,  வண்டிப்பாளையம் சாலை- சரவண நகர் இணைப்புச் சாலை அமைக்கும் திட்டத்துக்கு பணம் ஒதுக்கியும், நகராட்சி தொடர்ந்து கிடப்பில் போட்டு வருவதற்கும், சில தனி நபர்களின் சுயநலத்துக்கு, நகராட்சி அடங்கிப் போய்விட்டதே காரணம் என்று, கடலூர் நகர குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன் குற்றம் சாட்டி உள்ளார்.இதைக் கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior