கடலூர்:
மாணவர்களுக்கு புத்தகக் கல்வியைவிட வாழ்க்கைக் கல்வியே அவசியம் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகப் பதிவாளர் ஏ.ஆர். வீரமணி தெரிவித்தார்.
கடலூர் குமாரப்பேட்டை நியூ மில்லேனியம் கல்வியியல் கல்லூரி 6-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, சனிக்கிழமை நடந்தது.
பி.எட். பட்டம் படித்த மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வீரமணி பேசியது:
இந்தியா விடுதலையடைந்த 1947-ல் 500 கல்லுரிகள் மட்டுமே இருந்தன. இப்போது 20,667 கல்லூரிகள் உள்ளன. 1947-ல் 25 ஆயிரம் ஆசிரியர்கள் இருந்தனர். தற்போது 5.5 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் 688 பி.எட் கல்லூரிகளில் 75 ஆயிரம் மாணவர்கள் பயில்கிறார்கள். 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு, கட்டாயக் கல்வி சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. இதனால் ஆசிரியர்கள் தேவை அதிகரிக்கும். எனவே பி.எட். பட்டம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது. இத்தனை கல்லூரிகள் இந்தியாவில் இருந்தும், மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்ததாகச் சொல்ல முடியாது.
மேலை நாடுகளில் 75 சதவீத மாணவர்கள் உயர் கல்வியில் சேர்கிறார்கள். ஆனால் இந்தியாவில் 10 முதல் 15 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது. 2 முதல் 3 சதவீத மாணவர்களே ஆராய்ச்சிக் கல்வியில் சேர்கிறார்கள். மாணவர்களை நல்வழிப்படுத்துவது ஆசிரியர் கையில்தான் உள்ளது. ஒழுக்கம் இல்லாதவர்கள் ஆசிரியர் பணிக்குத் தகுதியற்றவர்கள். கலாசாரம், ஒழுக்கம் சீர்கெடாத கல்வி வேண்டும். வாழ்க்கைக் கல்வி மேம்பட தன்னம்பிக்கை அவசியம் தேவை.
அத்தகைய கல்வியை அளிக்கும் பொறுப்பு, ஆசிரியர்களுக்கு உள்ளது என்றார் வீரமணி. விழாவுக்கு கல்லூரித் தலைவர் ஆர். சந்திரசேகரன் தலைமை வகித்தார். கல்லூரித் தாளாளர் டாக்டர் ராஜ்குமார் செல்வநாதன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் கிறிஸ்டியன் ஜெயசீலி அறிக்கை வாசித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக