
கடலூர் :
கடலூரில் மோட்டார் சைக்கிளில் வந்த மீனவரை நடுரோட்டில் ஆறு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவத்தால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
கடலூர், தேவனாம்பட்டினம் மீனவர் பிச்சைவரதன் மகன் மாரியப்பன் (40). மீனவர் விடுதலை வேங்கை அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலரான இவர், கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்தார். இவர் நேற்று மதியம் தேவனாம்பட்டினம் அமுது என்கிற ஆராவமுதன், நாகராஜன், புதுச்சேரி தேவா ஆகியோருடன், புதுச்சேரிக்குச் சென்று தீபாவளி பண்டிகைக்கு துணி எடுத்துக் கொண்டு, இரண்டு மோட்டார் சைக்கிளில் கடலூருக்கு வந்து கொண்டிருந்தனர். மாலை 3 மணியளவில் கடலூர் மஞ்சக்குப்பம் மணிகூண்டு அருகே வந்தபோது, பின்தொடர்ந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மாரியப்பன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
தற்செயலாக நடந்ததாக கருதிய மாரியப்பன் அதை பொருட்படுத்தாமல், மோட்டார் சைக்கிளை ஓட்ட முயன்றார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த தேவனாம்பட்டினம் ஞானசேகரன், முன்னால் சென்ற மாரியப்பன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து வந்த அமுது என்கிற ஆராவமுதனை பிடித்து இழுத்தார். அதில் நிலை தடுமாறி, மாரியப்பனும், அமுதுவும் கீழே விழுந்தனர்.
உடன் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஞானசேகரன் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட கும்பல், கீழே விழுந்த மாரியப்பனை சுற்றி வளைத்து, தலை மற்றும் தோள்பட்டை பகுதிகளில் வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டினர். அதைக் கண்டு திடுக்கிட்ட அமுது, அங்கிருந்து தப்பியோடி கடலூர் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தார். மோட்டார் சைக்கிள்களில் வந்த கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஏழுமலை, ஏட்டு சந்திரசேகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று நடுரோட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாரியப்பனை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின், மேல் சிகிச்சைக்காக மாலை 3.35 மணிக்கு புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார். மாரியப்பன் படுகொலை செய்யப்பட்ட தகவலை அறிந்த தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள், கடலூர் அரசு மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு நிலவியது. தேவனாம்பட்டினம் பகுதியில் பதட்டம் நிலவி வருவதைத் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து, தேவனாம்பட்டினம் ஞானசேகரன் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட கும்பலைத் தேடி வருகின்றனர். அவர்களை பிடித்தால் தான் கொலைக்கான காரணம் தெரியவரும். கொலை செய்யப்பட்ட மாரியப்பனுக்கு இரண்டு மனைவிகளும், நான்கு மகள்களும் உள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக