சிதம்பரம்:
தனியார் பள்ளிகளில் நீதிபதி கோவிந்தராஜன் குழு பரிந்துரைப்படி கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தங்களது சம்பளம் குறைந்து விடுமோ என்கிற அச்சத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.நீதிபதி கோவிந்தராஜன் குழு பரிந்துரைத்த கட்டணம் குறைவாக இருப்பதாக பள்ளி நிர்வாகிகள் கூறிவரும் நிலையில் செலவைக் கட்டுப்படுத்த அவர்கள் தங்கள் சம்பளத்தில் கைவைத்து விடுவார்களோ என்று ஆசிரியர்கள் அஞ்சுகின்றனர்.
தமிழகத்தில் 1800 மெட்ரிக் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 2 ஆயிரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 20 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். சுமார் 80 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். ஆண்டுதோறும் மெட்ரிக் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசுத் தேர்வில் சராசரியாக 95 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி அடைகிறார்கள்.தேர்ச்சி விகிதம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் அதிகம் உள்ளது. தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதால் பெற்றோர் தங்களது குழந்தைகளை மெட்ரிக் பள்ளிகளில் விரும்பிச் சேர்க்கின்றனர். இதனால் மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் பெருகிவருகிறது. கிராமப்புறங்களிலும் தற்போது மெட்ரிக் பள்ளிகள் புற்றீசல்போல் பெருகிவிட்டன.மெட்ரிக் பள்ளிகள் சிறந்து விளங்குவதற்கு முக்கியக் காரணம் ஆசிரியர்களின் கடினமான உழைப்புதான்.
இவ்வாறு மாணவர்களின் மேம்பாட்டுக்காக கடினமாக உழைக்கும் தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களின் ஊதியம், பணிநிலை மற்றும் ஓய்வூதியப் பலன்கள் பெரும்பாலான பள்ளிகளில் திருப்திகரமாக இல்லை என்பதே உண்மை.ஊதியம் பள்ளிக்கு பள்ளி மாறுபடுகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் ஊதியத்திற்கும், மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் காணப்படுகிறது.2002-ல் தமிழக அரசு சிட்டிபாபு தலைமையில் அமைக்கப்பட்ட குழு, மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை பரிந்துரை செய்தது. மெட்ரிக் பள்ளி நிர்வாகம் வசூலிக்கும் கட்டணத்தில் 70 சதவீத தொகையை ஆசிரியர்கள் ஊதியத்துக்கு செலவிட வேண்டும் என அறிவுரை கூறியது. இருப்பினும் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு போதிய ஊதியம் கிடைக்கவில்லை.
இதற்கு முக்கியக் காரணம் மெட்ரிக் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணத்திலிருந்துதான் ஆசிரியர்களுக்கு ஊதியம் தரவேண்டியுள்ளது .உத்தேசமாக, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு மாதச் சம்பளம் 31,950, அதே தனியார் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. அரசுப்பள்ளி முதுகலை ஆசிரியருக்கு 21,135-ம், தனியார் பள்ளி முதுகலை ஆசிரியருக்கு 4 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரையும், அரசுப் பள்ளி பட்டதாரி ஆசிரியருக்கு 20,725-ம், தனியார் பள்ளி பட்டதாரி ஆசிரியருக்கு 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையும், அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியருக்கு 12,060-ம், தனியார் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரையும் வழங்கப்படுகிறது.
இதில் கிராமப்புற மெட்ரிக் பள்ளிகளில் இதைவிட மிகக்குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. இவ்வளவு கடுமையாக உழைத்தாலும் தங்களுக்கு நியாயமான ஊதியம் கிடைக்கவில்லையே என்ற மனக்குமுறல் தனியார் பள்ளி ஆசிரியர்களிடையே அதிகம் மேலோங்கியுள்ளது.
இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகளின் கூட்டமைப்பு நிர்வாகி சி.ஆர்.லட்சுமிகாந்தன் தெரிவித்தது:
உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்குவதைப் போலவே மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தமிழக அரசே ஊதியம் மற்றும் இதர பணிச் சலுகையை வழங்க வேண்டும். பள்ளியின் நிர்வாகம், பராமரிப்பு, உள்கட்டமைப்பு வசதி மற்றும் இதர செலவுகளை ஈடுசெய்யும் வகையில் தனியார் பள்ளிகளுக்கு உரிய கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும்.
இத்தகைய கட்டணத்தை மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், பெற்றோர்-ஆசிரியர் கழகப் பிரதிநிதிகள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட மாவட்டக்குழு நிர்ணயிக்க வேண்டும். மாநில அளவில் 5 அல்லது 6 பேர் கொண்ட ஒரு குழு ஆயிரக்கணக்கான பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயம் செய்வது எந்த வகையிலும் சாத்தியமில்லை என்றார் சி.ஆர்.லட்சுமிகாந்தன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக