கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை (திங்கள்கிழமை) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமன் தெரிவித்தார்.
ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் 1-1-2011 ஐ தகுதி நாளாகக் கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் 25-10-2010 அன்று வெளியிடப்பட உள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அனைத்து வேலை நாள்களிலும் 9-11-2010 வரை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும். குடியிருப்போர் நலச் சங்கங்களிலும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பட்டியல் நகல் வைக்கப்படும்.
மேலும் 1-1-2011 அன்று 18 வயது பூர்த்தி ஆகும் அனைவரும் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள மனு அளிக்கலாம். மேற்கண்ட தினங்களில் பொதுமக்கள் தங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளுமாறும், பெயர்கள் விடுபட்டு இருந்தால் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் 30-10-2010 மற்றும் 7-11-2010 ஆகிய நாள்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி, மனுக்களைப்பெற தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கி உள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுதல்: 25-10-2010. சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்ய படிவங்கள் பெறுதல்: 25-10-2010 முதல் 9-11-2010 வரை. கிராம சபைகளில் வாக்காளர் பட்டியலை வாசித்தல் மற்றும் பார்வைக்கு வைத்தல் 30-10-2010 (சனிக்கிழமை) மற்றும் 2-11-2010 (செவ்வாய்க்கிழமை). நியமன அமைவிடங்களில் படிவங்கள் பெற சிறப்பு முகாம் நாள்கள் 30-10-2010 மற்றும் 7-11-2010 காலை 9 முதல் மாலை 5 மணி வரை. சிறப்பு முகாம் தினங்களில் விண்ணப்பங்கள் பெற அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக