கடலூர்:
கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மெகா வேலைவாய்ப்பு முகாமில், 1,200 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வழங்கினார்.
கடலூர் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடலூர் கோல்டன் சிட்டி அரிமா சங்கம் ஆகியவை இணைந்து இந்த வேலைவாய்ப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்து இருந்தன. முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்களாக லார்சன் அண்ட் டூப்ரோ, நோக்கியா, ஹுண்டாய் இந்தியா மோட்டார்ஸ், டி.வி.எஸ். லாஜிஸ்டிக்ஸ், ஏஇ அண்ட் இ சென்னை ஒர்க்ஸ் லிமிடெட், அவ்லான் டெக்னாலஜிஸ், ஜேகேஎம் ஆட்டோ டைனமேட்டிக் டெக்னாலஜிஸ், அப்டேட்டர் சர்வீசஸ் உள்ளிட்ட 16 நிறுவனங்கள் கலந்து கொண்டன.
கடலூர் புனித வளனார் கல்லூரியில் நடந்த இந்த வேலைவாய்ப்பு முகாமுக்கு ஆண், பெண் இளைஞர்கள் 5,300 பேர் வந்து, பெயர்களைப் பதிவு செய்து இருந்தனர். பட்டதாரிகள், டிப்ளமோ படித்தவர்கள், கேட்டரிங் படித்தவர்கள், கனரக வாகன ஓட்டுநர்கள், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தவறியவர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். இவர்களில் 1,200 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும் 800 பேருக்கு, பணி நியமனத்துகான பரிசீலனை நடந்து வருகிறது.
பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாலையில் நடந்தது. பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வழங்கினார். நிகழ்ச்சிக்கு புனித வளனார் கல்லூரி முதல்வர் ஐ.ரட்சகர் அடிகள் தலைமை வகித்தார். புனித வளனார் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் வி.ஆக்னல் அடிகள் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக சட்டப் பேரவை உறுப்பினர்கள் கோ.அய்யப்பன் (கடலூர்), சபா.ராஜேந்திரன் (நெல்லிக்குப்பம்), கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி, அரிமா சங்க கவர்னர் பி.குப்புசாமி, உதவி கவர்னர்கள் ஆர்.எம்.சுவேதாகுமார், பி.கல்யாண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புனித வளனார் கல்லூரி கணினி அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் எம்.அருமைச் செல்வம் வரவேற்றார். அரிமா மாவட்டத் தலைவர் ஆர்.புருசோத்தமன் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக