கடலூர்:
புயல் மழைக் காரணமாக கடலோர கிராம மக்களை கலெக்டர் சீத்தாராமன் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். "ஜல்' புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக கடலூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை தொடங்கிய மழை தீவிரமடைந்து நண் பகலில் பேய் மழை பெய்தது. கடல் அலை சீற்றத்துடன் 10 அடி உயரம் வரை எழுந்தது. இதனால் தேவனாம்பட்டினம், தாழங்குடாவில் மூடப்பட்டிருந்த முகத்துவாரங்கள் அலையின் வேகத்தால் மணல் மேட்டை கடந்து கடல்நீர் ஆறுகளில் நிரம்பியது. உப்பனாறு, பெண்ணையாறுகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
மீனவர்கள் தங்கள் படகுகளை அப்புறப்படுத்தி பாதுகாப்பாக கட்டி வைத்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் சூறாவளிக் காற்று கடலூரை விட்டு நகர்ந்து சென்னை நோக்கி நகர்ந்தது. அதனைத் தொடர்ந்து மழை குறைந்தது. கடலோரப் பகுதியில் உள்ள சித்திரைப்பேட்டை, திருச்சோபுரம், பெரியக்குப்பம், சாமியார் பேட்டை, பெரியப்பட்டு, முடசல்ஓடை, கிள்ளை, பரங்கிப்பேட்டை கிராம மக்களை கலெக்டர் சீத்தாராமன், டி.ஆர்.ஓ., நடராஜன், பி.ஆர்.ஓ., முத்தையா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மனோகரன், ஆகியோர் சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். அப்போது கலெக்டர் கடல் சீற்றம் தணியும் வரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார். மேலும் அந்தந்த கிராமங்களில் பொறுப்பு அதிகாரியாக செயல்படுவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென்றும், ரேஷன் கடைகள் திறந்து வைக்க வேண்டுமென்றும் கலெக்டர் உத்தரவிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக