உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 26, 2010

கடலூர் மாவட்டத்தில் கன மழை பரவனாற்றில் வெள்ளப் பெருக்கு : அடித்துச் செல்லப்படும் மணல் குன்றுகள்

பரவனாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், கடலூரை அடுத்த திருச்சோபுரம் பகுதியில் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்படும் புகழ்பெற்ற மணல் குன்றுகள்.
கடலூர்:

             பரவனாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கடலூர் அருகே புகழ் வாய்ந்த மணல் குன்றுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்படுகின்றன.

               வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கடலூர் மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக பெரும்பாலும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வந்தது. வியாழக்கிழமை பகல் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. கன மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி, உபரிநீர் பெருமளவு வெளியேற்றப்பட்டு வருகிறது. திட்டக்குடி வெலிங்டன் ஏரி நீர்மட்டம் வியாழக்கிழமை 21.5 அடியாக இருந்தது. மொத்த உயரம் 29.7 அடி. ஏரிக்கு 1060 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.

                      கொள்ளிடம் கீழணை மொத்த உயரம் 9 அடி. வியாழக்கிழமை அணை நிரம்பி விட்டது. அணைக்கு 19,929 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்த, 23,270 கனஅடி நீர், கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டு கடலுக்குச் செல்கிறது. சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் இருந்து 5,291 கனஅடி நீர் வெள்ளாற்றில் திறந்து விடப்பட்டு, கடலுக்குச் சென்று கொண்டு இருக்கிறது. வாலாஜா ஏரியில் இருந்து, 1,520 கனஅடி நீரும், பெருமாள் ஏரியில் இருந்து 2,215 கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது.

               இந்த உபரி நீர் முழுவதும் பரவானாற்றில் திறந்து விடப்பட்டு, கடலுக்குச் சென்று கொண்டு இருக்கிறது. பரவனாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கடலூரை அடுத்த திருச்சோபுரம் பகுதியில் உள்ள, மணல் குன்றுகள் பெருமளவு அடித்துச் செல்லப்படுகின்றன. பல நூறு ஆண்டுகளுக்கு முன் சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தால் உருவான இந்த மணல் குன்றுகளில் சில, 100 அடி உயரம் கொண்டவை. பல திரைப் படங்கள் இங்கு எடுக்கப்பட்டு உள்ளன.

                    இயற்கை எழில் கொஞ்சும் இந்த மணல் குன்றுகள், முந்திரிக் காடுகள் அழிக்கப்பட்டதாலும், பரவனாறு வெள்ளப் பெருக்காலும் தொடர்ந்து அழிவைச் சந்தித்து வருகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், மணல் குன்றுகள் பெரிதும் சேதம் அடைந்து வருகின்றன. கன மழை காரணமாகவும் பரவனாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்காலும் தீர்த்தனகரி, தாணூர் உள்ளிட்ட பெருமாள் ஏரி பசனப் பகுதிகளில், 100 ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. நொச்சிக்காடு, நடுத்திட்டு பகுதிகளில் 300 ஏக்கரில் வெட்டி வேர் பயிரிடப்பட்டு உள்ளது. இதில் 100 ஏக்கர் தண்ணீரில் மூழ்கி உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior