உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 26, 2010

ஊகவணிகத்தில் மக்காச் சோளம்: கடலூர் மாவட்ட விவசாயிகள் புதிய முயற்சி

திட்டக்குடி வட்டம் கீழக்கல்பூண்டி கிராமத்தில் பூக்கத் தொடங்கி இருக்கும் மக்காச்சோளம். (வலது படம்) கீழக்கல்பூண்டி கிராமத்தில் அண்மையில் நடந்த விளக்கக் கூட்டம்
கடலூர்:

                  ஊகவணிகத்தின் மூலம், மக்காச்சோளத்துக்கு நியாயமான விலை கிடைக்க கடலூர் மாவட்ட விவசாயிகள் முயற்சி மேற்கொண்டு உள்ளனர்.

                  தமிழ்நாட்டில் 2 லட்சம் ஹெக்டேரில் மக்காச்சோளம் விளைவிக்கப்படுகிறது. இதில் இருந்து கிடைக்கும் மக்காச்சோளம், தமிழ்நாட்டின் ஆண்டுத் தேவையில் 50 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்கிறது. எனவே வெளி மாநிலங்களில் இருந்து மக்காச்சோளம் கொள்முதல் செய்யப்படுகிறது. எனினும் தமிழகத்தில் விளையும் மக்காச்சோளத்துக்கு, நியாயமான விலை கிடைப்பது இல்லை என்கிறார்கள் விவசாயிகள்.

                    கடலூர் மாவட்டம் மங்களூர், நல்லூர் ஒன்றியங்களில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. இந்த ஆண்டு 14,300 ஹெக்டேரில் பயிரிடப்பட்டு உள்ளது. மக்காச்சோள விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு, அதிகபட்சவிலையாக குவிண்டாலுக்கு ரூ.800 மட்டுமே கிடைத்ததாக விவசாயிகள் கூறுகிறார்கள். மக்காச்சோள வியாபாரிகள் ஒழுங்குமுறை விற்பனை நிலையங்களில், சிண்டிகேட் கூட்டணி அமைத்துக் கொண்டு, மக்காச்சோள விலையை குறைத்துவிடுவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். 

                இந்நிலையைப் போக்க ஊகவணிகம் மூலம் மக்காச்சோளத்தை விற்பனை செய்ய கடலூர் மாவட்ட விவசாயிகள் புதிய முயற்சி மேற்கொண்டு உள்ளனர். தமிழகத்தில் மஞ்சள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் இந்த முறையைப் பின்பற்றியதால், கடந்த 3 ஆண்டுகளாக அவர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை, முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு மக்காச்சோள விவசாயிகள் இந்த முயற்சியில் இறங்கி இருப்பதாக, கடலூர் மாவட்ட விவசாயிகள் கூறுகிறார்கள்.

              ஊகவணிகத்தை மேற்கொள்ளும் என்.சி.டி.இ.எக்ஸ். ​(Nation​al​ Commodity​ Deriv​ative Ex​ch​ange​ LTD)​  என்ற நிறுவனத்தை விவசாயிகள் தொடர்பு கொண்டதன் விளைவாக, அந்த நிறுவனத்தினர் கடந்த திங்கள்கிழமை கடலூர் மாவட்டத்துக்கு வருகை தந்து, விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். இக்கூட்டம் திட்டக்குடி வட்டம் கீழக்கல்பூண்டி கிராமத்தில் நடந்தது. ஊகவணிக நிறுவனத்தின் தலைமை அமைப்பாளர் உமா மதன், மக்காச்சோளப் பிரிவு தென்னிந்திய மேலாளர் ரமேஷ் சந்த், விருத்தாசலம் வேளாண் விற்பனை துறை உதவி அலுவலர் அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு விளக்கங்களை அளித்தனர்.

இது குறித்து மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், 

                  "தமிழகத்தில் விளைச்சலைவிட மக்காச்சோளத் தேவை அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு மக்காச்சோளத்துக்கு குவிண்டாலுக்கு ரூ.ஆயிரம் வரை கிடைத்து இருக்க வேண்டும். ஆனால் ரூ.800தான் கிடைத்தது. மஞ்சள் விவசாயிகளிடமும் வியாபாரிகள் இதே முறையைப் பின்பற்றியதால், மஞ்சள் விவசாயிகள் நியாயமான விலை கிடைக்காமல் அவதிப்பட்டனர். கடந்த 3 ஆண்டுகளாக ஊகவணிகத்தின் மூலம், மஞ்சள் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கிறது.

              அதன் அடிப்படையில் மக்காச்சோளத்திலும் ஊகவணிகத்தின் மூலம், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க, முயற்சி செய்கிறோம். இந்த முறையில் மக்காச்சோளத்தை விற்பனை செய்ய, விவசாயிகளுக்கு சேமிப்புக் கிடங்கு வசதிகள் தேவைப்படும். இந்த ஆண்டு இருக்கும் வசதிகளைப் பயன்படுத்துவோம். எங்கள் முயற்சி வெற்றி பெற்றால் வரும் ஆண்டுகளில் சேமிப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க தமிழக அரசை வற்புறுத்துவோம்' என்றார். 

                   நிகழ்ச்சியில், மாவட்ட அனைத்து விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட பொதுச் செயலர் கார்மாங்குடி வெங்கடேசன், உழவர் மன்றங்களின் நிர்வாகிகள் வேணுகோபால், ஏ.கே.ரவிச்சந்திரன், எல்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior