
கடல் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டு தாழங்குடா அருகே ஒதுங்கிக் கிடக்கும் மீன்பிடிப் படகு.
கடலூர்:
:கடலூர் கடலில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட புதிய நீரோட்டத்தால் படகுகள், வலைகள் அடித்துச் செல்லப்பட்டு, சேதம் அடைந்தன.
கடலூர் தேவனாம்பட்டினம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை கடல் நீரோட்டத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. கடற்கரையில் வெகுதூரம் வரை பொங்கி எழுந்த கடல் அலைகளுடன், நீரோட்டம் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி வேகமாக நகர்ந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர். இதில் கடற்கரையில் கட்டி வைக்கப்பட்டு இருந்த, 20 விசைப் படகுகள் மற்றும் வலைகள் 5 கி.மீ. தொலைவில் உள்ள தாழங்குடா வரை இழுத்துச் செல்லப்பட்டது.
படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் 2 படகுகள் அவற்றின் என்ஜின்கள் மற்றும் வலைகள் பலவும் சேதம் அடைந்ததாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் கூறுகையில்,
வடகிழக்கு பருவமழை காலத்தில் புயல் சின்னம் காரணமாக நீரோட்டத்தில் இத்தகைய மாற்றம் ஏற்படுகிறது. இதனால் படகுகளும் சேதம் அடைய நிறைய வாய்ப்பு உள்ளது. நீரோட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, வியாழக்கிழமை மீன் பிடிக்கச் சென்றவர்களுக்கு அதிக மீன் கிடைத்தது. வியாழக்கிழமை பாதிக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்கச் சென்று இருந்தன என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக