கடலூர் :
""கிராமப்புறங்களில் உள்ள 50 சதவீத பள்ளிகளில் ஆசிரியர்கள் சரியாக பாடம் சொல்லிக் கொடுப்பதில்லை,'' என அழகிரி எம்.பி., பேசினார்.
கடலூரில் நடந்த மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் சங்க மாநாட்டில் அவர் பேசியது:
சமுதாயத்தில் மாணவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல உதவுவது கல்வி. கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் 44 பல்கலைக் கழகங்கள் இருந்தன. கடந்த 2004க்கு பிறகு 44 தனியார் பல்கலைக் கழகங்கள் உருவாகியுள்ளன. இதை வளர்ச்சி என்று சொல்வதா, உள்நோக்கம் உள்ளதா என, சிந்திக்க வேண்டும். இது விவாதிக்கப்பட வேண்டிய கருத்து.
அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள் 85 சதவீதம் பேர் உயர் கல்விக்குச் செல்கின்றனர். இந்தியாவில் படிக்கும் மாணவர்கள் 11 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்விக்கு செல்கின்றனர் என, ஆய்வில் தெரிய வந்துள்ளது. கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் 10 மாணவர்களுக்கு சிலருக்குத் தான் வேலை கிடைக்கிறது. பி.இ., படிக்கும் நான்கு மாணவர்களில் ஒருவருக்குத் தான் வேலை கிடைக்கிறது.
மீதியுள்ள மூன்று மாணவர்களை தரமானவர்களாக உருவாக்கவில்லையா...
கல்லூரி, பல்கலைக் கழகங்களில் கடந்த 10 ஆண்டு காலமாக ஒரே பாடத் திட்டத்தை படித்து வருகிறோம். சீனா, அமெரிக்கா நாடுகளில் காலத்திற்கேற்ப புதுப் புது பாடத்திட்டங்கள் ஆண்டுதோறும் புகுத்தப்படுகின்றன. நம் நாட்டில் உள்ள கிராமப்புற பள்ளிகளில் 50 சதவீதம் ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்துவதில்லை என, ஆய்வு கூறுகிறது. இதைப் பார்க்கும் போது தனியார் பள்ளிகள் பரவாயில்லை. உங்களுடைய கோரிக்கை பரிசீலனை செய்யப்பட வேண்டியது தான். எல்லா கல்விக்கூடங்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எனவே, பள்ளிகளை ஆய்வு செய்து, கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அழகிரி எம்.பி., பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக