உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 28, 2011

விருத்தாசலம் பகுதியில் பிளாஸ்டிக் பொருள் தடை: முனைப்பு காட்டப்படுமா?


விருத்தாசலம் மணிமுத்தாற்றில் காணும் பொங்கலன்று பொதுமக்கள் வீசிய பிளாஸ்டிக் பொருள்கள் (கோப்புப்படம்).
 
விருத்தாசலம்:

        பிளாஸ்டிக் பொருள்கள் இயற்கைச் சூழலை மாற்றக்கூடிய ஒரு பெரும் ஆபத்தாக மாறியுள்ள நிலையில், பிளாஸ்டிக் பொருள் தடை குறித்த அரசின் விதிகள் வரவேற்கத்தக்கது என்றாலும், அதை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

             பிளாஸ்டிக்கின் பயன்பாடு அன்றாட வாழ்வில் அத்தியாவசியப் பொருளாகி விட்டது. முன்பெல்லாம் குறைந்த அளவில் இருந்த பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு தற்போது உணவகத்தில் சாப்பாட்டுக்காக பயன்படுத்தும் இலை முதல் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களில் உணவு பரிமாறுதலில் பயன்படும் கப்புகள் வரை எல்லாம் பிளாஸ்டிக் பொருள்களாகிவிட்டது.

இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலரான விருத்தாசலத்தைச் சேர்ந்த ஹபீப்ரஹ்மான் தெரிவித்தது: 

              சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கடைகளுக்குச் சென்று ஏதாவது பொருள் வாங்க சென்றால் துணி பை எடுத்துச் செல்லும் வழக்கம் இருந்தது. ஆனால் தற்போது பிளாஸ்டிக் பொருள்களின் வருகையால் அந்த பழக்கம் அடியோடு மறைந்து வருகின்றது.டீ கடைகளில் சென்று டீ வாங்கிச் செல்பவர்கள்கூட குவளைகள் எடுத்து வருவதில்லை. மாறாக பால் கவர்களில் டீ பார்சல் வாங்கி செல்கின்றனர். இது வருந்தத்தக்க செயலும் உடல் நலனுக்கு கேடான செயலும் ஆகும்.பிளாஸ்டிக் மாசுபாடு என்பது மனித நலத்தை மட்டும் பாதிப்பதோடு இல்லாமல், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலையும் அதிகளவில் பாதிக்கின்றது.

              நாம் பயன்படுத்திவிட்டு வீசியெறியும் பாலித்தீன் பைகளில் மழை நீர் தேங்கும்போது அதில் கொசுக்கள் இன பெருக்கம் அடைந்து, மலேரியா எனும் கொடிய நோயை உருவாக்குகின்றது. இதுபோல் குளம், ஏரி, ஆறு மற்றும் கடலில் அதிக அளவில் பிளாஸ்டிக் பொருள்கள் கொட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருள்களை நீர் வாழ் உயிரினமான மீன்கள் உண்ணுகின்றன. இந்நிலையில் பிளாஸ்டிக் பொருள்களை உண்ணும் மீன்களை நாம் உணவாக உட்கொள்ளும்போது மலட்டுத் தன்மை. குறைபாடுடைய குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. 

            மேலும் பிளாஸ்டிக் பொருள்கள் புற்றுநோயை உருவாக்கக்கூடிய தன்மையும் கொண்டது.பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாலித்தீன் பொருள்கள் மண்ணில் புதைவதால், மண்ணின் சூழலியல் தன்மை அதிகளவில் பாதிக்கப்படுகின்றது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தும், மழைநீர் உள்வாங்கும் திறனை மண் இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

                இதுமட்டுமல்லாமல் மருத்துவக் கழிவுகள் மற்றும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள், டீ கப்புகள், மேசை விரிப்புகள், தண்ணீர் டப்பாக்கள் போன்றவற்றை எரித்து விடுகின்றனர். இதனால் காற்று மாசுபாடும், நச்சுத் தன்மை வாய்ந்த சாம்பலும் உண்டாகி அதிக ஆபத்துக்கு வழி வகுக்கின்றது. மேலும் இதுபோன்ற பொருள்கள் சாக்கடை நீரில் கலப்பதால், சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, நோய் பரப்பும் கிடங்குகளாக மாறி வருகிறது. இன்று பல்வேறு ஆறுகள் சாக்கடை கால்வாய்களாக மாறி உள்ளதை நாம் காண்கின்றோம்.

              பிளாஸ்டிக் உபயோகப் பொருள்களை தடுக்க அரசு சட்டங்கள் உருவாக்கி இருப்பது வரவேற்கத்தக்து என்றாலும், அவற்றை முனைப்புடன் நடைமுறைபடுத்த வேண்டும். சட்டங்களும், விதிகளும், அரசும் மட்டுமே இத்தகைய பெரிய பணியை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கருதாமல், முடிந்த வரை பிளாஸ்டிக் உபயோகப் பொருள்களைத் தவிர்த்து மனித இனமும், சுற்றுச்சூழலும் வளமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior