உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
வியாழன், பிப்ரவரி 24, 2011

களையிழந்த கடலூர் சில்வர் பீச்

கடலூர்:

              நகராட்சி உள்ளிட்ட துறைகளின் அலட்சியம் காரணமாக, கடலூர் சில்வர் பீச் களையிழந்து காணப்படுகிறது.  

                கடலூர் மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் சில்வர் பீச்சும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாகத்தான் 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கடலூர் சில்வர் பீச் வளர்ச்சிப் பணிகளுக்காக, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பணம், பல்வேறு துறைகள் சார்பில் செலவிடப்பட்டு வந்தது. ஆனால் அண்மைக் காலமாக ஏற்கெனவே செய்யப்பட்ட பணிகளை முறையாக பராமரிக்காமலும், புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தாமலும், சில்வர் பீச் புறக்கணிக்கப்பட்டும் கேட்பாரற்றும் கிடக்கிறது.  

                ஆனால் கடற்கரைப் பக்கம் தலைகாட்டும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதில் மட்டும் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. கடற்கரையை வந்து எட்டிப் பார்த்துத் திரும்பினாலே போதும் கட்டணத்தக் கரந்து விடுகிறார்கள்.  இங்கு கடைபோடும் வணிகர்களுக்கும் கட்டணம் உண்டு. கடலூர் மக்களின் ஒரே பொழுதுபோக்கு அம்சம் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் தான். அதுவும் கோடைக்காலம் நெருங்கி விட்டால், கடலூர் மக்கள் பலரும் நாடும் ஒரே இடம் இக்கடற்கரைதான்.  

                      அண்மைக் காலமாக சில்வர் பீச் பராமரிப்புக்கு அப்பார்ப்பட்ட இடமாகக் காட்சி அளிக்கிறது. 18-ம் தேதி மாசி மகத் திருவிழாவுக்கு வந்த மக்கள் கூட்டம், அவர்களை நம்பி பொருள்களை கடைவிரித்த சிறு வணிகர்கள் அனைவரும் சேர்ந்து, கடற்கரையை அசுத்தத்தின் உயர் எல்லைக்குக் கொண்டு சென்று விட்டனர்.  இதனால் மெரீனாவுக்கு அடுத்த அழகான கடற்கரை என்ற பெயர் பெற்ற சில்வர் பீச் இன்று, அலங்கோலமாகக் காட்சி அளித்துக் கொண்டு இருக்கிறது. சுற்றுலாப் பயணிகளுக்கான படகு குழாம், இருந்த இடம் தெரியாமல் சிதைந்து கிடக்கிறது.  

              குப்பைகளை அகற்ற தற்போது புதிய கலாசாரம் சில்வர் பீச்சில் உருவாகி இருக்கிறது. கரும்புச்சாறு பிழிந்த சக்கைகள், பாலித்தீன் பைகள் போன்றவற்றை ஆங்காங்கே போட்டு தீயிட்டு எரிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.  இதனால் சில்வர் பிச் விரைவில் எரி சாம்பல்கள் நிறைந்த கருப்பு நிறக் கடற்கரையாக மாறும் அபாயம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. கடலூர் நகருக்கு உள்ளேயே நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள், விதிகளுக்கு மாறாகக் குப்பைகளை தெருக்களிலேயே எரிக்கும் வேலைதான் செய்கிறார்கள்.  

               அந்தக் கலாசாரம்தான் சில்வர் பீச்சுக்கும் பரவியிருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கிறார்கள். அவ்வப்போது சில்வர் பீச் அசுத்தம் அடையும் போதெல்லாம், ஏதேனும் தொண்டு நிறுவனங்கள்தான் முன்வந்து, சுத்தம் செய்து வருகின்றன. தற்போதும் மாசி மகத் திருவிழாவுக்குப் பின் அலங்கோலமாகக் காட்சிதரும் சில்வர் பீச், தன்னை அழகுபடுத்திக் கொள்ள, மீண்டும் ஒரு தொண்டு நிறுவனத்தைத் தேடிக் கொண்டு இருக்கிறதோ?

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior