உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
வெள்ளி, மார்ச் 18, 2011

தேர்தல்: கடலூர் வாக்காளர்கள் கருத்து

 கடலூர்:

              தமிழகத்தில் விலைவாசி பெருமளவுக்கு உயர்ந்து விட்டது. இதனால் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக கடலூர் வாக்காளர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.  

                13 முறை பெட்ரோல் விலை உயர்வு, விண்ணைத் தொடும் அளவுக்கு விலைவாசி, ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட முறைகேடு புகார், எங்கும் நிறைந்து காணப்படும் லஞ்சம், ஊழல், பகட்டான விழாக்கள், அமைச்சர்கள் செல்லும் இடமெங்கும் கிலோ மீட்டர் நீளத்துக்கு கண்ணைப் பறிக்கும் டிஜிட்டல் பேனர்கள், 50 பக்கம் 100 பக்கம் என்று செய்தித் தாள்களில் விளம்பரங்கள், அனைத்து திட்டங்களிலும் கமிஷன்கள் என அடுக்கடுக்கான புகார்களுக்கு மத்தியில், 108 ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவக் காப்பீட்டு திட்டம், கான்கிரீட் வீடு, ரூ.1-க்கு அரிசி உள்ளவற்றை காண்பித்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க ஆளும் கட்சி திணறிக் கொண்டிருக்கிறது.  

                கடந்த 5 ஆண்டுகளில் இந்த அரசின் சாதனைதான் என்ன? அவை ஏற்படுத்திய பாதிப்புகளால், சட்டப்பேரவைத் தேர்தலில் அதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறார்கள் 

கடலூரை அடுத்த கிராமங்களைச் சேர்ந்த நமது சாதாரண பொதுஜனங்கள்:  

குண்டு உப்பளவாடியில் பெட்டிக் கடை வைத்து இருக்கும் ராமலிங்கம் மனைவி கௌரி:

         வருமானம் உயரவில்லை. ஆனால் விலைவாசி உயர்வு கடுமையாக இருக்கிறது. எப் பொருளும் வாங்க முடியவில்லை. எனவே ஆட்சி மாற வேண்டும். ஸ்பெக்ட்ரம் முறைகேடு பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது.  

கண்டக்காடு மலர் விவசாயம் செய்யும் குறு விவசாயி சண்முகம்: 

                 சுனாமியில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. இப்பகுதியில் 7 ஆழ்குழாய்க் கிணறு அமைத்துக் கொடுத்து இருக்கிறார்கள், இதனால் சுமார் 100 ஏக்கரில் விவசாயம் மீண்டும் நடக்கிறது. இங்கு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ரேஷனில் அரிசி கிலோ ரூ.1 க்கு கிடைக்கிறது. இலவச டி.வி.பெட்டி, 108 ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் எல்லாம் சரி. ஆனால் விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டதே. இலங்கையில் தமிழர்கள் சாகிறார்களே. காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை. எனவே காங்கிரஸ்காரர்களுக்கு ஓட்டுபோட மாட்டோம். 

 சுப உப்பளவாடி விஜயலட்சுமி: 

               100 நாள் வேலைக்குச் சென்றாலும், ரேஷனில் ரூ. 1 க்கு அரிசி வாங்கினாலும், இலவச டி.வி. பெட்டி கொடுத்தாலும், பிள்ளைகள் படிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு என்ன செய்வது? கிடைக்கும் கூலி போதவில்லை. விலைவாசி முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து விட்டதே. எனவே விலைவாசி குறைய ஆட்சி மாறவேண்டும். விலைவாசியை குறைக்கும் அரசு வரவேண்டும். 

 ஐ.டி.ஐ. படித்து முடித்து வேலைக்குக் காத்து இருக்கும் இளைஞர், தாழங்குடா சத்தியமூர்த்தி: 

             வேலைக்கு அலைந்து கொண்டு இருக்கிறேன். வேலை கிடைக்கவில்லை எல்லோருக்கும் வேலை  கிடைக்க வேண்டும். அனைவருக்கும் வேலை கொடுக்கும் அரசாங்கம் வரவேண்டும். அரசு கொடுத்த டி.வி. பெட்டிகள் பல வெடித்து உடைந்து விட்டன. நிலம் தருவதாகச் சொன்னார்கள். ஆனால் கொடுக்கவில்லை. தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தினமும் கொல்லப்படுகிறார்கள். நடவடிக்கை எடுக்க வேண்டிய காங்கிரஸ் கூட்டணி அரசு, வேடிக்கை பார்க்கிறது. அவர்கள் மீது கடுமையான வெறுப்புதான் ஏற்படுகிறது. அவர்களுடன் கூட்டு வைத்து இருக்கும் தி.மு.க. அரசு மாறவேண்டும்.  

கடலூரில் சைக்கிளில் சுமந்து டீ விற்பனை செய்யும் குமார்: 

            தி.மு.க. அரசின் திட்டங்கள் பரவாயில்லை. ஆனால் எப்போதும் இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்ந்து விட்டதே. அதனால் உழைத்தும் வருமானம் போதவில்லை. எந்தப் பொருளும் வாங்க முடியவில்லை. அமைச்சர்கள் வந்தால் தெருவெல்லாம் டிஜிட்டல் பேனர்களும், பக்கம் பக்கமாக பத்திரிகை விளம்பரங்களும்தான் மிச்சம். அவற்றைக் கண்டால் எரிச்சல்தான் வருகிறது. அந்த செலவுத் தொகைகளை ஏழைகளுக்குக் கொடுக்கலாம். விளம்பரங்களால் மக்களுக்கு என்ன பயன்? ஆட்சி மாறும் என்றுதான் நினைக்கிறேன்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior