சிதம்பரம்.:
சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட திமுக, பாமகவினர் அதிகம் பேர் கட்சி தலைமையிடம் விருப்ப மனு கொடுத்திருந்தனர். ஆனால் திமுக போட்டியிட்டால் வெற்றி பெறும் தொகுதியான சிதம்பரம் தொகுதியை கூட்டணிக் கட்சியான மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு ஒதுக்கப்பட்டதால் திமுகவினர் ஏமாற்றம் அடைந்து அதிருப்தியில் உள்ளனர்.
சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளர் துரை.கி.சரவணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2006-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மாவட்டச் செயலாளர் ஏ.அருண்மொழிதேவன் வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.பாலகிருஷ்ணன் தோல்வியுற்றார்.
நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ துரை.கி.சரவணன் விருப்ப மனு கொடுத்திருந்தார். மேலும் நகரச் செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார், ஒன்றியக் குழுத் தலைவர்கள் ரா.மாமல்லன் (குமராட்சி), முத்துபெருமாள் (பரங்கிப்பேட்டை) உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டவர்கள் திமுக தலைமையில் சீட் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இத்தொகுதி மூவேந்தர் முன்னேற்றக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்டதால் திமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
சிதம்பரம் தொகுதி மூ.மு.க.வுக்கு ஒதுக்கியதால் பாமகவினர், வன்னியர் சமூக மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கருத்து வேறுபாடுகளை களைந்து வன்னியர் சமுதாய மக்களின் வாக்குகளையும், திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை அரவணைத்து, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆதரவுடன் அக்கட்சிகளின் வாக்கு வங்கியை முழுமையாக பெற்று மூவேந்தர் முன்னேற்றக் கழகம் வெற்றி பெற வியூகம் அமைத்துள்ளது.
போட்டியாளரை வீழ்த்த அமைச்சரின் சாதுர்யம்: கடந்த 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் தனது அரசியல் போட்டியாளர்களில் ஒருவரான முன்னாள் எம்.எல்.ஏ. துரை.கி.சரவணனுக்கு சீட் கிடைக்கக்கூடாது என மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மூலம் சிதம்பரம் தொகுதி கேட்டு வலியுறுத்தி அக்கட்சிக்கு சிதம்பரம் தொகுதியை வாங்கித் தந்ததாக கூறப்படுகிறது.
அத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.பாலகிருஷ்ணன் போட்டியிட்டு தோல்வியுற்றார். அதிமுக வேட்பாளர் ஏ.அருண்மொழிதேவன் வெற்றி பெற்றார். இந்த முறை துரை.கி.சரவணனுக்கு மீண்டும் சீட் கொடுத்தால் நிச்சயம் வெற்றி பெறுவார் என உளவுத்துறை முதல் அனைத்து பகுதியிலிருந்து திமுகவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ÷ஆனால் திமுக வெற்றி பெறும் தொகுதியை மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு அமைச்சர் வாங்கிக் கொடுத்துள்ளார் என துரை.கி.சரவணன் ஆதரவாளர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
சிதம்பரம், புவனகிரி தொகுதிகளில் அதிமுகவினர் அதிருப்தி: கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயமும், சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.அருண்மொழிதேவனும் வெற்றி பெற்றனர். தற்போது சிதம்பரம், புவனகிரி தொகுதிகளில் போட்டியிட முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி, ஏ.அருண்மொழிதேவன், செல்வி ராமஜெயம், சிதம்பரம் நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.என்.குமார், மாவட்ட பேரவைச் செயலாளர் வி.கே.மாரிமுத்து, மாவட்ட இலக்கிய அணிச் செயலர் சொ.ஜவகர் உள்ளிட்ட 50- அதிமுகவினர் போட்டியிட கட்சி தலைமையிடம் விருப்ப மனு அளித்துள்ளனர்.
வெற்றி பெற்ற இத்தொகுதிகளில் இத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. இந்த இரு தொகுதிகளும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் நிலையுள்ளதால் அதிமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக