உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 18, 2011

கடலூர் தொகுதி தற்போதைய எம்.எல்.ஏ.கோ.அய்யப்பனுக்கு சீட் இல்லை: கடலூரில் திமுக தொண்டர்கள் அதிருப்தி;



வில்வராயநத்தம் பகுதியில் தி.மு.க.வினரால் உடைக்கப்பட்ட கட்சி கொடிக்கம்பம்.
 
கடலூர்:
 
             கடலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் கோ.அய்யப்பனுக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட தி.மு.க. வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால் தி.மு.க.வினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். 
 
                  தொடக்கம் முதல் புதன்கிழமை மாலை வரை தற்போதைய எம்.எல்.ஏ. அய்யப்பன்தான் கடலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் என்று பிரகாசமான நிலை இருந்தது. இந்த நிலை திடீரென வியாழக்கிழமை மாறியது எப்படி என்று கடலூர் தி.மு.க.வினர் ஆச்சரியம் தெரிவிக்கிறார்கள்.  வியாழக்கிழமை காலையில் கடலூர் முன்னாள் நகராட்சித் தலைவர் ஏ.ஜி.ராஜேந்திரன் பெயரும், கடலூர் தொகுதிக்குப் பரிசீலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது எப்படி என்று தி.மு.க.வினர் கேள்வி எழுப்புகிறார்கள். 
 
                கடலூர் தொகுதியில் அனைவரின் நம்பிக்கையையும், அன்பையும் பெற்றவராக அய்யப்பன் இருந்து வருகிறார். தொகுதியில் பல்வேறு நல திட்டங்கள் அவரால் நிறைவேற்றப்பட்டு உள்ளன என்று தொகுதி மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.  பெருவாரியான தி.மு.க. தொண்டர்களும் நிர்வாகிகளும் அய்யப்பன்தான் வேட்பாளர் என்று, ஏற்கனவே தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டனர். இந்த நிலையில், வேட்பாளர் மாற்றம், கடலூர் தொகுதி தி.மு.க.வினர் பலரையும் பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.  எதிர்க்கட்சினரையும் அரவணைத்துச் செல்பவராக, மாற்றுக் கட்சி முகாம்களிலும் தனது ஆதரவாளர்களைக் கணிசமாகக் கொண்ட அய்யப்பன், ஒருமுறைதான் எம்.எல்.ஏ.ஆக பணியாற்றி இருக்கிறார். 
 
             மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்காமல், 3 முறை எம்.எல்.ஏ. ஆக இருந்தவருக்கு, 4-வது முறையாக வாய்ப்பு அளித்து இருப்பது ஏன் என்று தி.மு.க.வினர் கொதிப்புடன் வினா எழுப்புகிறார்கள்.  கடலூர் நகராட்சியின் நிóர்வாகச் சீர்கேட்டால், பாதாள சாக்கடைத் திட்டம் போன்ற பணிகளால் மக்கள் மிகுந்த, துன்பங்களுக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாகி இருக்கும் நிலையில், சர்வபலம் வாய்ந்த வேட்பாளராக, அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் நிறுத்தப்பட்டு இருக்கிறார்.  அவரை எதிர்த்து போட்டியிடும் ஆற்றல் தி.மு.க. அணியில் அய்யப்பனுக்கு மட்டுமே இருக்கும் நிலையில், புகழேந்தியை வேட்பாளராக தி.மு.க. அறிவித்து இருப்பது இத்தொகுதி தி.முக. வெற்றி வாய்ப்பு கருத்தில் கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் கடலூர் தி.மு.க. வினர் பலரும் தெரிவிக்கிறார்கள்.  
 
                இதன் விளைவாக கடலூரில் ராஜாம்பாள் நகர், வில்வநகர், புருசோத்தமன் நகர், அரசு மருத்துவமனைச் சாலை உள்ளிட்ட பல இடங்களில் தி.மு.க. கொடிக் கம்பங்களை தி.மு.க. வினரே வெட்டிச் சாய்த்தார்கள். கொடிக் கம்ப கல்வெட்டுகள் சேதப்படுத்தப்பட்டன. அத்துடன் கடலூர் நகர திமுக அலுவலகத்தையும் அவர்கள் அடித்து நொறுக்கினர்.  வில்வநகரில் உள்ள அண்ணா சிலையில் அவரது கண்களை தி.மு.க.வினர் கருப்புத் துணியால் கட்டி, தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். வேட்பாளர் நியமனத்தை எதிர்த்து கிராமப் பகுதிகளில் தி.மு.க.வினர் போராட்டம் வெள்ளிக்கிழமை வலுக்கும் என்று தி.மு.க.வினர் பலரும் தெரிவிக்கின்றனர். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior