குடிநீர் வழங்கக் கோரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கும் வீணங்கேணி கிராமத்தினர்.
கடலூர்:
ஆழ்குழாய்க் கிணறு பழுதடைந்ததால் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம் வீணங்கேணி கிராம மக்கள் கடந்த 4 மாதங்களாக குடிநீருக்காக போராடி வருகின்றனர்.
வீணங்கேணி கிராமத்தில் 3 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இவ்வூரில் குடிநீருக்காக போடப்பட்டிருந்த ஆழ்குழாய்க் கிணறு, என்.எல்.சி. சுரங்கங்களுக்கு வைக்கப்பட்ட வெடிகளால் அதிர்வடைந்து சேதமடைந்து விட்டது. இதனால் குடிநீர் வசதி இல்லாத வீணங்கேணி மக்கள், கடந்த 4 மாதங்களாக பக்கத்து கிராமங்களுக்குச் சென்று குடிநீர் எடுத்து வருகிறார்கள். இதுகுறித்து கிராம மக்கள் கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் செய்தபோது, புதிய ஆழ்குழாய்க் கிணறு அமைக்க டெண்டர் விடப்பட்டு இருப்பதாகவும், தேர்தல் முடிந்த பிறகுதான் பணி தொடங்க முடியும் என்றும் தெரிவித்தனர்.
இடைப்பட்ட காலத்தில் என்.எல்.சி. நிறுவனம் மூலம் லாரிகளில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்ததும் லாரிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு விட்டதாக கிராம மக்கள் தெரிவிக்கிறார்கள். இப்பிரச்னை தொடர்பாக வீணங்கேணி கிராமத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் ஆர்.ராமசாமி, சீனிவாசன் தலைமையில் கிராம மக்கள் திங்கள்கிழமை கடலூரில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன்,
விரைவில் ஆழ்குழாய் கிணறு தோண்ட உத்தரவிட்டு இருப்பதாகவும், அதுவரை லாரிகளில் குடிநீர் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக