உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 24, 2011

கொள்ளிடக் கரை சீரமைப்பு: டெல்டா விவசாயிகள் ஏமாற்றம்


கொள்ளிடக்கரையை பலப்படுத்த ஏரிகளில் மண் எடுக்காமல், வெள்ளூர் கிராமத்தில் தனியார் வயலில் மீன் பண்ணை அமைக்க குளம் வெட்டிக்கொடுத்து அதிலிருந்து மண் எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர்
கடலூர்:

            ரூ. 108 கோடி கொள்ளிடக் கரை சீரமைப்புத் திட்டத்தில், கடலூர் மாவட்ட டெல்டா விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறாததால் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.  எனவே இப்பணி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று விவசாயிகள் தமிழக அரசை வற்புறுத்தி உள்ளனர். 

               தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உற்பத்தியாகி கிழக்கு நோக்கிப் பாயும் கொள்ளிடம், பெண்ணையாறு, வெள்ளாறு, கெடிலம் ஆறு, மணிமுத்தாறு ஆகியவை கடலூர் மாவட்டம் வழியாக ஓடி வங்கக் கடலில் கலப்பதால், ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் இம்மாவட்டம் பெரும் வெள்ளச் சேதங்களைச் சந்திக்கிறது.  

               இது குறித்து தொடர்ந்து பல ஆண்டுகளாக கடலூர் மாவட்ட விவசாயிகள் குரல் கொடுத்ததன் விளைவாக, மேற்கண்ட ஆறுகளின் கரைகளைப் பலப்படுத்த அண்மையில் மத்திய அரசு பெரும் தொகை ஒதுக்கியது.  மாநில அரசின் 25 சதவீதம் நிதியையும் சேர்த்து, ரூ.624 கோடியில் ஆறுகளைப் பலப்படுத்தும் திட்டம், தமிழகப் பொதுப்பணித் துறையால் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதில் ரூ. 108 கோடியில் கொள்ளிடத்தின் வடக்குக் கரை பலப்படுத்தும் பணி பிப்ரவரி 18-ம் தேதி தொடங்கப்பட்டது.  

              இத்திட்டப்படி அணைக்கரை முதல் கடற்கரை வரை 62 கி.மீ. தூரம் கொள்ளிடக் கரை பலப்படுத்தும் பணி, 7 பிரிவுகளாக ஒப்பந்ததாரர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் கோரிக்கை அடிப்படையில், கரையைப் பலப்படுத்தத் தேவையான மண், வீராணம் ஏரியில் இருந்து 21.25 லட்சம் கன மீட்டர், அரியலூர் பொன்னேரியில் இருந்து 5.87 லட்சம் கன மீட்டர், சிதம்பரம் பொன்னேரியில் இருந்து 7.12 லட்சம் கன மீட்டர், நாரைக்கால் ஏரியில் இருந்து 13.56 லட்சம் கனமீட்டர் எடுக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் உள்ளது.  ஏரிகளில் இவ்வாறு மண் எடுப்பதால் 0.18 டி.எம்.சி. நீர் கொள்ளளவு அதிகரிக்கும் என்றும் விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

              இதனால் விவசாயிகள் பலரும், தங்கள் ஏரிகள் தூர்வாரப்பட்டு, நீர்ப்பிடிப்புத் திறன் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.  ஆனால் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி மேற்கண்ட ஏரிகளில் மண் எடுக்கவில்லை என்றும், அக்கம் பக்கத்தில், தனியார் வயல்களில் மண் எடுத்து, திட்டத்தை முடிக்கப் பார்க்கிறார்கள் என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.  2012 மார்ச் மாதத்துக்குள் இப்பணி முடிக்கப்பட வேண்டும் என்றாலும், கரை பலப்படுத்தும் பணி 60 சதவீதம் முடிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. 

            இந்த நிலையில் வீராணம் ஏரியில் இருந்து மிகக் குறைந்த அளவே மண் எடுக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.  21.25 லட்சம் கன மீட்டர் மண் வீராணத்தில் இருந்து எடுக்க வேண்டுமானால், 150 நாள்கள் தினமும் 100 லாரிகள், 5 நடை மண் எடுத்தால் மட்டுமே சாத்தியம் என்கிறார் பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர்.

 இது குறித்து பாசமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், 

                 "வீராணத்தில் இருந்து 5 லட்சம் கன மீட்டர் மண் மட்டுமே எடுக்கப்பட்டு உள்ளது. அரியலூர் பொன்னேரியில் இருந்து மண் எடுக்க அந்த மாவட்டத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு மண் எடுக்க முடிய வில்லை. அதை ஈடுகட்ட வீராணத்தில் இருந்து கூடுதல் மண் எடுத்து இருக்கலாம். ஆனால் எடுக்க வில்லை. மற்ற ஏரிகளிலும் மண் எடுக்கவில்லை.  பிப்ரவரி மாதம் முதல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு காலியாக வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் விவசாயிகள் எதிர்பார்த்தபடி மண் எடுக்க வில்லை. அக்கம்பக்கத்தில் எங்கோ மண் எடுத்து ஒப்பேற்றி இருக்கிறார்கள். இனி காவிரி நீர், வீராணத்துக்கு வந்தபின் மண் எடுக்க முடியாது.  இதனால் விவசாயிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.  இது குறித்து அதிகாரிகள், விவசாயிகள் அடங்கிய குழுவை நியமித்து ஆய்வு செய்ய வேண்டும்' என்றார். 

 கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கச் செயலர் விநாயகமூர்த்தி கூறுகையில், 

             "ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி ஏரிகளில் மண் எடுக்கவில்லை. வெள்ளூர் கிராமத்தில் தனியார் நிலத்தில் மீன்குளம் அமைக்க மண் எடுத்து, மண்ணை கொள்ளிடக்கரைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.  ஒப்பந்தத்தில் இல்லாத புங்கனேரியில் மண் எடுத்து உள்ளனர். எனவே இது குறித்து அதிகாரிகள் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். ஒப்பந்தத்தில் உள்ளபடி, ஏரிகளில் எடுக்கப்பட்ட மண் அளவை கணக்கிட்டு, அதற்கு மட்டுமே பணம் கொடுக்க வேண்டும்' என்றார். 

 இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியது , 

            "ஒப்பந்தத்தில் உள்ளபடி ஏரிகளில் மண் எடுக்கப்படுகிறது. 2012 மார்ச்சுக்குள் ஏரிகளில் மண் எடுக்கப்படும்' என்று தெரிவித்தனர்.   



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior