உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 24, 2011

சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்திவைப்பு: பெற்றோர்கள், மாணவர்கள் கவலை

சிதம்பரம்:

                    சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், பழைய பாட திட்டமே பின்பற்றப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளதால் பெற்றோர்கள், மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.  

               பழைய பாட திட்டத்தின்படி பாட புத்தகங்கள் அச்சிட கால அவகாசம் தேவைப்படுவதால் பள்ளி திறக்கப்படுவது ஜூன் 15-ம் தேதிக்கு தள்ளி வைத்துக்கொள்ளலாம் என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.  சமச்சீர் கல்வி திட்டம் கடந்த அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, அதற்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டு புதிய பாட திட்டத்தின்படி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு மாவட்ட பாடநூல் குடோன்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  

              தேர்தல் ஆணையத்தின் கடுமையான நெறிமுறைகளால் பள்ளிகளுக்கு புத்தகங்கள் விநியோகிக்கப்படாமல் இருந்தன. தேர்தல் முடிந்ததும் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பப்பட்டுவிட்டன. ஆட்சி மாற்றத்தால் சமச்சீர் பாட திட்ட நூல்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டியும், தற்போது ஆட்சியாளர்களுக்கு உடன்படாத கருத்துக்களை நீக்க வேண்டியுள்ளதால் சமச்சீர் பாட திட்டம் நிறுத்தம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  

                 வரும் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு, பல மெட்ரிக் பள்ளிகளில் சமச்சீர் கல்வி திட்ட பாட புத்தகங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கோடை விடுமுறையிலேயே பெரும்பாலான பாடங்களை நடத்தி முடித்துள்ளனர். மாணவர்களும் அப் பாடங்களையே படித்துள்ளனர். இந்நிலையில் சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் மாணவர்களும், பெற்றோர்களும் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.  

                   10-ம் வகுப்பு மாணவர்களை பொறுத்தவரை அரசுப் பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு நவம்பர் மாதத்துக்குள் அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க வேண்டும், ஜூன் முதல் நவம்பர் வரை மொத்த வேலை நாட்கள் சுமார் 120. இவற்றில் தேர்வு நாட்கள் 15. காலாண்டு விடுமுறை 10 நாட்கள் போக மீதி 95 நாட்கள்தான் கற்பித்தல் பணிக்காக கிடைக்கிறது.  தற்போது பள்ளி திறப்பது தள்ளிப் போவதால் கற்பித்தல் பணி நாட்கள் இன்னும் குறையும் வாய்ப்புள்ளது. எனவே மாணவர்கள் நலன் பாதிக்காத வகையில் சமச்சீர் பாட திட்டத்தில் நீக்கப்பட்ட பகுதிகளை அறிவித்து ஜூன் 1-ம் தேதியே பள்ளிகளை திறக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்பாகும்.  

             மேல்நிலை 2-ம் ஆண்டு பாடப் புத்தகங்களில் எவ்வித மாற்றமும் தற்போது இல்லை என்பதால் அனைத்து பள்ளிகளுக்கும் இப் பாட புத்தகங்கள் சென்றடைந்த போதிலும் பள்ளி திறக்கும் நாள் தள்ளிப்போவதால் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.  எனவே அரசுப் பொதுத்தேர்வை எதிர்நோக்கி உள்ள மாணவர்களின் நலன் கருதி பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஜூன் 1-ம் தேதி தொடங்க அரசு உரிய உத்தரவுகளை உடனடியாக பிறப்பிக்க வேண்டும்.  

                  கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வித் திட்டத்தை பல்வேறு நிபுணர்கள், கல்வியாளர்கள், பாடநூல் ஆசிரியர்கள் குழுவாக செயல்பட்டு தயாரித்திருந்தாலும் அவற்றில் உள்ள சிறுசிறு பிழைகளை தவிர்த்தும், அனைத்து பிரிவினராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துகளை மட்டும் புத்தகத்தில் இடம் பெறச்செய்திருந்தால் தற்போதைய புதிய அரசால் இத்திட்டம் நிறுத்தம் செய்யப்படாமல் இருந்திருக்கும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.  



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior