உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 30, 2011

அசுத்தமாக்கப்படும் கடலூர் ஆறுகள்: நகர மக்களின் சுகாதாரம் கேள்விக் குறி


ஜவான்ஸ் பவன் அருகே குப்பை மேடாக மாற்றப்பட்டு வரும் கெடிலம் ஆறு.
 
கடலூர்:

       கடலூரில் குப்பைகளைக் கொட்டி ஆறுகள் குப்பை மேடுகளாக மாற்றப்பட்டு வருவதால், நகர மக்களின் சுகாதாரம் கேள்விக் குறியாக மாறி வருகிறது.

              பெண்ணையாறு, கெடிலம் ஆறு, உப்பனாறு ஆகியவை கடலூர் நகரம் வழியாக ஓடி வங்கக் கடலில் கலக்கின்றன.பெண்ணையாற்றிலும் கெடிலம் ஆற்றிலும் மழை காலங்களில் மட்டுமே வெள்ளப் பெருக்கு ஏற்படுகின்றன. வெள்ளைக்காரர்கள் ஆட்சி காலத்தில் நீர்வழிப் போக்குவரத்துக்காக வங்கக் கடலோரம் உருவாக்கப்பட்ட உப்பனாற்றில், பெண்ணை ஆறும் கெடிலம் ஆறும் கலந்து கடலில் சங்கமம் ஆகின்றன.இதனால் நீண்ட தூரம் உள்ள உப்பனாற்றில் ஏராளமான ரக மீன்கள் உள்ளன. 

               எனவே கடலூர் உப்பனாற்றில் சிறிய படகுகள் மூலமாகவும், தூண்டில்களைப் பயன்படுத்தியும், 300-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மீனவர் குடும்பங்கள் மீன்களைப் பிடித்து பிழைப்பு நடத்தி வந்தன.ஆனால் ஆலைக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு இதுதான் சரியான இடம் என்று கடலூரை மத்திய அரசு தேர்வு செய்ததால், மேல்நாடுகள் பலவற்றில் தடை செய்யப்பட்ட உயிர் காக்கும் மருந்துகள், ரசாயனப் பூச்சிக் கொல்லி மருந்துகள், சாயங்கள் போன்றவற்றைத் தயாரிக்கும் பன்னாட்டுத் தொழிற்சாலைகள், துணிகளுக்குச் சாயம் ஏற்றும் தொழிற்சாலைகள், ஏற்றுமதி தரம் வாய்ந்த ஜெல்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்டவை உப்பனாற்றின் கரையில் நிறுவப்பட்டு உள்ளன.

             இவற்றின் மோசமான ரசாயனக் கழிவுகள் உப்பனாற்றிலும், கடலிலும் கலப்பதால், உப்பனாறு பெருமளவில் மாசுபட்டு மீன்களே இல்லாத நிலைக்குச் சென்று கொண்டு இருக்கிறது.இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், கடலூர் மக்களின் சுகாதாரமும் கேள்விக் குறியாக மாறிவிட்டது.தற்போது நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் எதையும் கண்டுகொள்ளாத பொறுப்பற்ற தன்மையால், கெடிலம் மற்றும் பெண்ணையாறுகளும் மாசுபட்டு வருகிறது. கெடிலம் மற்றும் பெண்ணை ஆறுகளில் நகரின் கழிவுகள் அனைத்தும் கொட்டப்படுகின்றன.

               ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், கோழிக் கடைகள் வைத்து இருப்போர் கழிவுகள் அனைத்தையும் ஓசையின்றி ஆறுகளில் கொட்டி நகரை அசுத்தத்தின் கேந்திரமாக மாற்றி வருகிறார்கள்.பிளாஸ்டிக் குப்பைகள் அனைத்தும் ஆறுகளில் தாராளமாகக் கொட்டப்படுகின்றன. இந்த நிலையில் கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டக் கழிவுகளையும் சுத்திகரித்து, உப்பனாற்றில் கலந்துவிடத் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

           ஏற்கெனவே ஆறுகளில் 15 கி.மீ. தூரம் வரை கடல் நீர் புகுந்து விட்டதால், கடலூர் நகரில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறிவிட்டது. மாசுபட்ட நிலத்தடி நீர், கட்டுப்பாடின்றி கழிவுகள் கண்ட இடங்களில் எல்லாம் கொட்டிவிடும் பரிதாப நிலையால், கடலூர் நகரம் மக்கள் வாழத் தகுதியற்ற நகரமாக மாறி வருவது, மக்களை பெரிதும் கவலையில் ஆழ்த்தி வருகிறது.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior