சிதம்பரம்:
சிதம்பரம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமூகநலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் நேரில் சென்று ஆறுதல் அளித்து இலவச வேட்டி-சேலை, அரிசி மற்றும் நிவாரணத் தொகை ஆகியவற்றை வழங்கினார்.
சிதம்பரத்தை அடுத்த பூங்கொடி, தரசூர் ஆகிய கிராமங்களில் தீவிபத்தில் 12 வீடுகள் அண்மையில் எரிந்து சேதமடைந்தன. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களில் ஒருவரான செல்வி ராமஜெயம் ஞாயிற்றுக்கிழமை மேற்கண்ட கிராமங்களுக்குச் சென்று வேட்டி-சேலை, அரிசி மற்றும் நிவாரணத் தொகை தலா ரூ.2 ஆயிரம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன், கோட்டாட்சியர் எம்.இந்துமதி, வட்டாட்சியர் ஜே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை சிதம்பரத்தை அடுத்த புவனகிரி, கீரப்பாளையம் ஆகிய பகுதிகளில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். அப்போது ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
சிறப்பான வரவேற்பு:
தமிழக சமூகநலத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற செல்வி ராமஜெயம் சனிக்கிழமை இரவு தனது சொந்த ஊருக்கு திரும்பினார். அப்போது சொந்த ஊரான பரங்கிப்பேட்டைக்குச் செல்லும் வழியில் சிதம்பரத்தை அடுத்த பி.முட்லூரில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பி.முட்லூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். பி.முட்லூரில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு வாகனங்களில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர். இதனால் கடலூர் - சிதம்பரம் சாலையில் 20 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கட்சி நிர்வாகிகளின் கட்டுப்பாட்டை தளர்த்துவாரா?
வெடி கலாசாரம்:
தனது சொந்த தொகுதியான புவனகிரி தொகுதியில் அமைச்சர் செல்வி ராமஜெயம் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது கீரப்பாளையத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு விழாவுக்கு வந்தபோது சாலையில் 2 ஆயிரம் வாலா வெடியை வைத்து தீ வைத்தனர். அவ்வழியே வந்த வாகனங்களை போலீசார் நிறுத்தாததால் அந்த நேரத்தில் சிதம்பரத்திலிருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பஸ்ஸின் அடியில் வெடி சிக்கி வெடித்தது.
இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்து அங்கும், இங்கும் ஓடினர். டிரைவர் உடனடியாக பஸ்ûஸ எடுத்ததால் பயணிகள் அமைதியடைந்தனர். வெடியின் மீது சிக்கிய பஸ் சிறிதுநேரம் நின்றிருந்தால் பஸ் தீப்பிடித்திருக்கும் என பயணிகள் தெரிவித்தனர். அமைச்சர் செல்லும் இடமெல்லாம் வெடி, வெடித்து கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இச்செயல் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்ததை பார்க்க முடிந்தது. மேலும் செல்வி ராமஜெயத்தை மக்கள் நெருங்க விடாமல் கட்சி நிர்வாகிகள் தடையாக இருந்ததால் பொதுமக்கள் அமைச்சரிடம் சென்று தங்களது குறைகளை தெரிவிக்க இயலவில்லை என தெரிவித்தனர்.
எனவே எதிர்காலத்தில் அமைச்சர் செல்வி ராமஜெயம் வெடி கலாச்சாரத்தை தடுத்து, கட்சி நிர்வாகிகளின் கட்டுப்பாட்டை தளர்த்து பொதுமக்களை சந்திக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக