பண்ருட்டி:
வருமானம் மற்றும் முதல் பட்டதாரிச் சான்று பெற மாணவர்களும், பெற்றோர்களும் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஜாதி, வருமானம், இருப்பிடம் மற்றும் முதல் பட்டதாரிக்கான சான்றுகளை பெற வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு செய்துள்ளனர்.
பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மேற்கண்ட சான்றுகளை பெற விண்ணப்பித்துள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்னர் விண்ணப்பித்தவர்களுக்கு சனிக்கிழமை சான்றுகள் வழங்கப்படும் என வட்டாட்சியர் அலுவலகத்தினர் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து சனிக்கிழமை ஏராளமானோர் சான்றுகளைப் பெற பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்டனர். ஆனால் வாயிலில் சனி, ஞாயிறு விடுமுறை என எழுதி கதவு மூடியிருந்ததால் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கோபமடைந்ததால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வட்டாட்சியர் அனந்தராம் கூடியிருந்தவர்களிடம் சமரசம் பேசி திங்கள்கிழமை சான்று தருவதாக கூறி அனுப்பி வைத்தார்.
பின்னர் வட்டாட்சியர் அனந்தராம் கூறியது,
முதல் பட்டதாரி, வருமானம், இருப்பிடம், ஜாதிச் சான்று கேட்டு ஏராளமானோர் விண்ணப்பித்து உள்ளனர். பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. விடுமுறை நாளான சனிக்கிழமை கூட்டம் அதிகம் வந்தனர். விடுமுறை நாள்களிலும் பரிசீலனைப் பணி நடைபெற்று வருகிறது. எனவே சான்று கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு திங்கள்கிழமை சான்றுகள் வழங்கப்படும் என அனந்தராம் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக