கடலூர்:
நாள்கள் மீன்பிடித் தடைகாலம் முடிவடைந்ததால், கடலூர் மாவட்ட மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்றனர்.62 கி.மீ. தூரம் கடற்கரையைக் கொண்ட கடலூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு உள்ளன.
ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்கும் வசதி கொண்ட 1000 பெரிய படகுகள், கட்டுமரங்கள் மற்றும் 5 ஆயிரம் சிறிய படகுகள் கடலூர் மாவட்டத்தில் உள்ளன.ஏப்ரல் 15-ம் தேதி முதல் 45 நாள்கள் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலமாக இருப்பதால், மீன் வளத்தைப் பெருக்கும் வகையில், அந்தக் காலத்தில் வங்கக் கடலில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு இருந்தது.பெரிய படகுகளில் சென்று சிறிய மீன்களைக் கூட பிடித்துவிடும் வலைகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
சிறிய படகுகள், கட்டுமரங்கள் மட்டும் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டு இருந்தன.மீன்பிடித் தடைகாலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளையும் வலைகளையும் பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபட்டு இருந்தனர்.மீன்பிடித் தடைகாலம் முடிந்து கடலூர் மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன், ஞாயிற்றுக்கிழமை காலை மீன் பிடிக்கச் சென்றனர்.90 சதவீதம் படகுகள் மீன்பிடிக்கச் சென்று இருப்பதாக மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் தெரிவித்தார்.
இவற்றில் பெரும்பாலான படகுகள் மீன் பிடித்து கொண்டு இன்று (திங்கள்கிழமை) காலை கரை திரும்பும் என்றும், மற்ற படகுகள் ஆழ்கடலில் 3 அல்லது 4 நாள்கள் தங்கி மீன் பிடித்துவிட்டுக் கரை திரும்பும் என்றும் சுப்புராயன் தெரிவித்தார். மீன்கள் ஏராளமாகக் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக