பரங்கிப்பேட்டை :
பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்களின் 30 ஆண்டு கோரிக்கையான அன்னங்கோயில் முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் பணி 10 கோடி ரூபாய் செலவில் மண்வெட்டி கப்பல் மூலம் நடந்து வருகிறது.
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை கடற்கரையொட்டி சாமியார்பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, சின்னூர், கிள்ளை உட்பட 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் அன்னங்கோயில் முகத்துவாரம் வழியாக கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்த முகத்துவாரம் அடிக்கடி தூர்ந்து விடுவதால் கடந்த 30 ஆண்டுகளாக கடலுக்குள் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வந்தது.
முகத்துவாரத்தை நிரந்தரமாக ஆழப்படுத்த அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்தனர். ஒவ்வொரு தேர்தலின் போதும் மீனவர்களிடம் அன்னங்கோயில் முகத்துவாரம் நிரந்தரமாக ஆழப்படுத்தப்படும் என வாக்குறுதி தருவதும், தேர்தல் முடிந்ததும் அன்னங்கோவில் எங்கே இருக்கிறது என்று கேட்கும் நிலை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி மறுவாழ்வு திட்டத்தில் உலக வங்கி நிதி உதவியுடன் முத்துவாரத்தை நிரந்தரமாக ஆழப்படுத்த 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு சென்னையில் கடந்த ஆண்டு டெண்டர் விடப்பட்டது. ஆனால் பணி துவங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் பணி நடக்குமா என்ற கேள்வி மீனவர்களிடையே எழுந்தது. இதற்கிடையே கடந்த ஒரு மாதமாக முகத்துவாரம் பகுதியில் மண்மேடுகளை அகற்ற ஒரு கிலோ மீட்டர் தூரம் பெரிய அளவிலான குழாய் பதிக்கப்பட்டது. கடந்த வாரம் நாகப்பட்டினத்தில் இருந்து மண்வெட்டி கப்பல் கொண்டுவரப்பட்டு கடந்த 27ம் தேதி முதல் அன்னங்கோயில் முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி துவங்கியது.
மண்வெட்டி கப்பல் மூலம் 1,350 மீட்டர் தூரம் மண்மேடுகள் வெட்டி எடுக்கப்பட்டு பைப்லைன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. முகத்துவாரம் ஆழப்படும் பணி முடிந்ததும், வெள்ளாற்றில் இருந்து கடல் பகுதிவரை மண் சரியாமல் தடுக்கவும், படகுகள் செல்வதற்கு ஏதுவாக பெரிய அளவில் கற்கள் கொண்டு வரப்பட்டு இருபுறமும் அடுக்கப்பட உள்ளது. முகத்துவாரம் ஆழப்படுத்துவது மற்றும் பாறாங்கற்கள் அடுக்குவது உள்ளிட்ட அனைத்து பணிகளும் ஒரு ஆண்டிற்குள் முடிந்துவிடும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் அன்னங்கோயிலில் மீன் இறங்கு தளம் அமைக்க 13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பணியும் முடியும் பட்சத்தில் கடலூர் துறைமுகத்திற்கு இணையாக பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் பகுதி வளர்ச்சியடைந்து விடும் என்பதில் ஐயமில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக