உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

கடலூரில் 24 கிராமங்கள் பயனடையும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய துவக்க விழா

திட்டக்குடி:
           
               திட்டக்குடியை அடுத்துள்ள தொளார் கிராமத்தில் தொளார், கொத்தட்டை, திருவட்டத்துறை, இறையூர், கொடிக்களம் உட்பட 24 கிராமங்கள் பயனடையும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றினை அனுமதித்துள்ளது. இந்த சுகாதார நிலைய துவக்க விழா நடந்தது.

            விழாவிற்கு தமிழக சமூக நலத்துறை அமைச்சர் செல்விராமஜெயம் தலைமை தாங்கினார். விழாவில் ஜெயப்பிரகாஷ், ஆனந்தன், லோகநாதான், மணிகண்டன் ஆகிய 4 பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அரசு சார்பில் தலா 25ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையும் 18 மாணவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.
 
சிறப்பு திட்டங்கள் அமலாக்க துறை அமைச்சர் எம்.சி. சம்பத் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தும் பேசியது:-


            இந்த மருத்துவ மனைக்கு சொந்தக் கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் நிதி ஒதுக்கப்படும் மருத்துவ துறையில் முதன்மை பெறவேண்டும் என்ற கருத்துடன் முதல்-அமைச்சர் அம்மா செயல் படுகிறார். எந்தப்பகுதிக்கு எது தேவையோ அதை செய்து தருபவர் அவர் தான். உலக அளவில் சூப்பர் ஸ்பெஷலாட்டி தரத்துடன் சென்னை மருத்துவமனை அமையஉள்ளது.

            இந்த ஆண்டு அவர் முதல்வராக பொறுப்பேற்ற வரலாற்று சிறப்பு மிக்க ஆண்டு. தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த புதிய மருத்துவமனை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் தான் பெண் சிசு அதிகமாக உள்ள மாவட்டம். கர்ப்பிணி பெண் களுக்காக 3 கட்டங் களாக வழங்கும் வகையில் 12ஆயிரம் ரூபாய் நிதியை முதல்-அமைச்சர் ஒதுக்கியுள்ளார். கர்ப்பிணி பெண்கள் இதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

             மிகவும் பின்தங்கிய இந்த பகுதியில் அனைவரும் அனைத்து மருத்துவ வசதிகளையும் பெறவேண்டும் என விரும்பி தான் இந்த மருத்துவ மனையை அனுமதித்துள்ளோம். இவ்வாறு எம்.சி. சம்பத் பேசினார். 
 
விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் பேசியது:-

             தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதா மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். முதல்- அமைச்சர் அம்மா சொல்வதை விட செய்துகொண்டு இருப்பதுதான் அதிகம். தினமும் ஒரு திட்டம் என அறிவித்து அதை செயல் படுத்தியும் வருகிறார். முதல்-அமைச்சர் அம்மா ஒவ்வொரு நிமிடமும் என்ன செய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்களோ பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவார் களோ என சிந்தித்து செயல்படுகிறார்.

             தொட்டில் குழந்தை திட்டத்தை மீண்டும் கொண்டுவந்துள்ளார். பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தை கொண்டுவந்துள்ளார். இவ்வாறு செல்வி ராமஜெயம் பேசினார். விழாவில் கடலூர் மாவட்ட கலெக்டர் அமுத வல்லி, திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் தமிழ்அழகன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மனோகர், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயமணிராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் முருகேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

               விழாவில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன், தாசில்தார்கள் சையத்ஜாபர் விஜயமேரி, கண்ணன்,மருத்துவ அலுவலர்கள் மாலதி, வலம்புரிஜான், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திருமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக துணை இயக்குனர் சம்பத் அனைவரையும் வரவேற்றார். முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் புலிகேசி நன்றி கூறினார்.
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior