காட்டுமன்னார்கோவில் :
காட்டுமன்னார்கோவில் பருவதராஜகுருகுல மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1972ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., படித்த பழைய மாணவர்கள் 40 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து தங்களின் பசுமை நிகழ்வுகளை நினைவு கூர்ந்தனர்.
காட்டுமன்னார்கோவில் பருவதராஜகுருகுல மேல்நிலைப் பள்ளியில் படித்தவர்கள் தற்போது பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் கடந்த 1972ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., படித்த பழைய மாணவர்கள் 40 பேர் 40 ஆண்டு இடைவெளிக்கு பின் சந்தித்து தங்களின் பசுமை நிகழ்வுகளை நினைவு கூர்ந்தனர். இந்த சந்திப்பில் சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம், தற்போது பள்ளியின் நிர்வாகி ராதாகிருஷ்ணன், பள்ளி தலைமை ஆசிரியர் சின்னமணி உள்ளிட்ட 40 பேர் சந்தித்து ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கி தங்களின் பசுமையான நெகிழ்வுகளை நினைவு கூர்ந்தனர்.
பழைய நினைவுகளின் அடிப்படையில் தங்களை பெயர் சொல்லியும் ஒருமையிலும் அழைத்துக் கொண்டதுடன், துள்ளித் திரிந்த இடங்கள், வகுப்பறைகள் மற்றும் ஆசிரியரிடம் தண்டனை பெற்றது உள்ளிட்டவைகளை நினைத்து பார்த்து உற்சாகமடைந்தனர். நேற்று நடந்த இந்த சந்திப்பில் தற்போது விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுடன் சேர்ந்து தங்கள் செலவில் அசைவ மதிய உணவை அனைவருக்கும் வழங்கி தாங்களும் உண்டு மகிழ்ந்தனர். இந்த சந்திப்பிற்கான ஏற்பாடுகளை பழைய மாணவர்கள் சார்பில் தற்போது ரயில்வே துறையில் பணியாற்றி வரும் மதிவாணன், பிரபல வியாபாரியாக உள்ள உதயசூரியன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக