கடலூர்:
சிறைத்துறை காவலர்களுக்கு கடலூர் கேப்பர் மலையில் ரூ.3.11 கோடியில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை, தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் இருந்து காணொலி மூலம் (வீடியோ கான்பரன்ஸிங்) மூலம் திறந்துவைத்தார்.
சிறைத்துறை நவீனமயமாக்கும் திட்டத்தில் கடலூர் கேப்பர் மலையில்
63 சிறைக் காவலர்கள், 2 தலைமை சிறைக் காவலர்கள்,
1 உதவி சிறை அலுவலர்,
1 கூடுதல் கண்காணிப்பாளர்
ஆகியோருக்கு, குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
இக்குடியிருப்புகளை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்து முதல்வர் பேசியது:
சிறைத் துறை பணியாளர்களுக்கான குடியிருப்புகள். அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு அருகாமையில் அமைத்திட வேண்டும். அப்போதுதான் அவர்கள் கைதிகளை பாதுகாக்கும் பணியில், தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடியும். இதை கருத்தில் கொண்டு, தற்போது தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள சிறைத்துறை குடியிருப்புகளைத் திறந்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இத்தருணத்தில் சிறைத்துறை அலுவலர்கள் தங்கள் பணியினை, சிறந்த முறையில் ஆற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி நிகழ்ச்சியில் பேசுகையில்,
கடலூரில் சிறைக காவலர்கள் குடியிருப்புகளை திறந்து வைத்துள்ள முதல்வருக்கு, கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், மக்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இக்குடியிருப்புகளில் முதல்வர் சட்டப் பேரவையில் அறிவித்தப்படி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சுற்றுச் சூழலை பசுமையாக்க மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அரசின் திட்டங்கள் அனைத்து பயனாளிகளுக்கும் விரைவில் சென்றடைய மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து நடவடிக்கைளும் மேற்கொள்வேன் என உறுதி கூறுகிறேன் என்றார்.
பயனாளிகள் சார்பாக சிறைக் காவலர் வெற்றிச்செல்வன் மனைவி சாந்தி பேசினார். நிகழ்ச்சியில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், சிறைத்துறை திருச்சி மண்டல துணைத் தலைவர் துரைசாமி, மத்திய சிறைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக