கடலூர்:
சுற்றுலாப் பயணிகள் வருகையை ஊக்குவிக்கும் வகையில், தனியார் வீடுகளில் சுற்றுலாப் பயணிகளைத் தங்க வைக்கவும், அவர்களுக்கு நமது கலாசாரத்தைப் பறைசாற்றும் வகையில் உணவு வகைகளை அளிக்கவும் வகை செய்யும் திட்டம், கடலூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி அறிவித்து உள்ளார்.
இது குறித்து ஆட்சியர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வரின் அறிவுரைப்படி சுற்றுலாத் துறையினரால், தமிழகத்தில் தனியார் பங்களிப்புடன், உணவுடன் கூடிய உறைவிடத் திட்டத்தை விரிவு படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் முதல் இடத்திலும், உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகையில், மூன்றாம் இடத்திலும் உள்ளது. பொழுதுபோக்கு, மருத்துவம், கல்வி போன்ற பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் வந்து தங்கும், வெளிமாநிலப் பயணிகள் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்து உள்ளது.
நடுத்தர சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிட வசதிகள் தற்போது போதுமானதாக இல்லை. எனவே கடலூர் மாவட்டத்துக்கு வருகை தரும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக, உணவுடன் கூடிய உறைவிடம் அளிக்கும் திட்டம், சுற்றுலாத் துறை மூலம் விரிவு படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் தனியார் தங்கள் வீடுகளில் உள்ள அறைகளை சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு அளிக்கலாம். அவ்வாறு தங்கள் வீடுகளில் சுற்றுலாப் பயணிகளை, உணவுடன் தங்க வைக்க விரும்புவோர் தங்கள் பெயர்களை, சுற்றுலாத் துறையில் பதிவுசெய்து கொள்ள வேண்டும். உணவுடன் கூடிய உறைவிடத் திட்டம் பற்றிய கையேடுகளில், விவரங்கள் அளிக்கப்படும்.
இத்திட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை தங்கள் வீடுகளில் தங்க வைக்க விருப்பம் உள்ளவர்கள்,
சுற்றுலா அலுவலர்,
ரயில்வே ஃபீடர் சாலை,
சிதம்பரம் (தொலைபேசி எண் 04144- 238739, செல்ஃபோன் 9789055400 )
என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக