உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
புதன், செப்டம்பர் 14, 2011

நாகப்பட்டினத்தில் ரூ.30 கோடி மதிப்பில் மீன்வளப் பல்கலைக்கழகம்

                  நாகப்பட்டினத்தில் ரூ.30 கோடி மதிப்பில் மீன்வளப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

 சட்டப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் செவ்வாய்க்கிழமை அவர் படித்த அறிக்கை:

              தமிழகம் 1,076 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது. 591 கடல் மீனவ கிராமங்களில், சுமார் 9 லட்சம் மீனவ மக்கள் உள்ளனர். 6,200 மீன்பிடி விசைப் படகுகளும், 50 ஆயிரம் பாரம்பரிய கலன்களும் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளன.

             தமிழகத்தில் கடல் மீன் உற்பத்தி 4 லட்சம் டன்னாகும். தமிழகத்தில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள கடல் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன .இதைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் இரண்டாவது மீன்வளக் கல்லூரி 1977-ல் தூத்துக்குடியில் நிறுவப்பட்டது. தமிழகத்தில் மீன்வளத்தைப் பெருக்குவதில் பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை எடுத்து வரும் அதே வேளையில், அதற்குத் தேவையான கல்வி அறிவைப் பெருக்குவதற்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அரசு முடிவெடுத்துள்ளது.

                இந்த அடிப்படையில், மீன் வளத்துக்கென மீன்வளப் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ அரசு முடிவெடுத்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் 188 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது. மீன் பிடித்தல், உலர் மீன் உற்பத்தி, இறால் வளர்ப்பு ஆகியவை அந்த மாவட்டத்தின் முக்கியமான பொருளாதார நடவடிக்கைகள். அந்த மாவட்டத்தில் 9 ஆயிரம் மீன்பிடிக் கலன்கள் மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ளன.

              நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, மீன்வளப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு நாகப்பட்டினம் மிகவும் உகந்த இடமாக உள்ளதால் அங்கு அந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்படுகிறது. நாகப்பட்டினம் தாலுகாவில் பனங்குடி, நாகூர் கிராமங்களில் 85 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் ரூ.30 கோடி மதிப்பில் மீன்வளப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். 

 பல்கலைக் கழகத்தில் இணைக்கப்படுவது எவை? 

 முதல்கட்டமாக, தூத்துக்குடியில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,

மீன்வளத் துறையின் ஆராய்ச்சிப் பிரிவு, 

சென்னையில் உள்ள மீன்வளத் தொழில்நுட்பப் பயிற்சி நிலையம், 

சென்னையில் உள்ள மீன்வளப் பணியாளர் பயிற்சி நிலையம், 

தமிழ்நாடு கடல்சார் கழகம் 

                  ஆகியன புதிய பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும்.இந்தப் பல்கலைக்கழகத்தில் இறால் வளர்ப்பு, கெண்டை மீன் வளர்ப்பு, வண்ண மீன் வளர்ப்பு, மீன் பதப்படுத்துதல், மீன் மதிப்பு கூட்டியப் பொருள்கள் உற்பத்தி, மீன்பிடி படகு மற்றும் இயந்திர பராமரிப்பு ஆகிய பாடப் பிரிவுகளில் பட்டங்கள் மற்றும் பட்டயங்கள் வழங்கப்படும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior