உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 12, 2013

கடலூர் மாவட்டத்தில் புதிதாக வேப்பூர் தாலுகா உதயம்

கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுக்காக்களை பிரித்து புதிதாக வேப்பூர் தாலுகாவை அமைப்பதற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

வேப்பூர் தாலுகா 

கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, விருத்தாசலம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 7 தாலுக்காக்கள் உள்ளன. இதில் குறிஞ்சிப்பாடி தாலுகா கடந்த தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்டது. இதனால் கடலூர் மாவட்ட தாலுக்காக்களின் எண்ணிக்கை 6–ல் இருந்து 7–ஆக அதிகரித்தது.

இந்த நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுக்காக்களை பிரித்து புதிதாக வேப்பூர் தாலுகா உருவாக்கப்படும் என முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். அதன்படி புதிய தாலுகாவை உருவாக்கி அரசாணையை தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

திட்டக்குடி–விருத்தாசலம் 

இதன்படி திட்டக்குடி தாலுகாவில் உள்ள சிறுபாக்கம் பிர்காவுக்குட்பட்ட 21 கிராமங்கள், விருத்தாலம் தாலுக்கா வேப்பூர் பிர்காவுக்குட்பட்ட 32 கிராமங்கள் என மொத்தம் 53 கிராமங்கள் வருகின்றன. இதில் விருத்தாசலம் தாலுகா நல்லூர் பிர்காவில் உள்ள 20 கிராமங்களில் நல்லூர், வண்ணாத்தூர், நகர், சாத்தியம், ஏ.சித்தூர், இலங்கியனூர், மே.மாத்தூர், வலசை, பிஞ்சனூர் ஆகிய 9 கிராமங்களும் வேப்பூர் பிர்காவுடன் இணைக்கப்படுகிறது. இந்த கிராமங்கள் அனைத்தும் திருச்சி–சென்னை பைபாஸ் சாலைக்கு மேற்கு பகுதியில் உள்ளவை.

இதன் மூலம் வேப்பூர் பிர்காவில் உள்ள கிராமங்களின் எண்ணிக்கை 23–ல் இருந்து 32–ஆக அதிகரித்துள்ளது. நல்லூர் பிர்காவில் மீதமுள்ள சின்னப்பரூர், எம்.பரூர், எடசித்தூர், சிறுவரம்பூர், டி.மாவிடந்தல், காட்டுபரூர், கர்நத்தம், விசலூர், எம்.அகரம், மங்கலம்பேட்டை, கோ.விலந்தூர் ஆகிய 11 கிராமங்களும் மங்கலம்பேட்டை பிர்கா என்ற பெயரில் விருத்தாசலம் தாலுகாவில் இணைக்கப்படுகிறது.

பிர்காக்களின் எண்ணிக்கை குறைந்தன 

திட்டக்குடி தாலுகாவில் திட்டக்குடி கிழக்கு, திட்டக்குடி மேற்கு, பெண்ணாடம், தொழுதூர், சிறுபாக்கம் என 5 பிர்காக்கள் இருந்தன. இதில் சிறுபாக்கம் பிர்கா வேப்பூர் பிர்க்காவில் இடம் பெறுவதால் பிர்காக்களின் எண்ணிக்கை 5–ல் இருந்து 4–ஆக குறைந்துள்ளது.

அதேபோல விருத்தாசலம் தாலுகாவில் கம்மாபுரம் மேற்கு, கம்மாபுரம் கிழக்கு, ஊமங்கலம், விருத்தாசலம் வடக்கு, விருத்தாசலம் தெற்கு, நல்லூர், வேப்பூர் என மொத்தம் 7 பிர்க்காக்கள் இருந்தன. இதில் வேப்பூர் பிர்க்காவை தனியாக பிரிக்கப்பட்டுள்ளதால், இங்குள்ள பிர்காக்களின் எண்ணிக்கை 7–ல் இருந்து 6 ஆக குறைந்துள்ளது.

தற்காலிக கட்டிடம் 

புதிய தாலுகாவுக்கு வேப்பூர் பஸ்நிலையம் அருகில் உள்ள பழைய அரசு மருத்துவமனை தற்காலிக அலுவலகமாக பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காக மருத்துவமனைக்கு புதுவர்ணம் பூசி பராமரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புதிய தாலுகா அலுவலகம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள தாலுக்காக்களின் எண்ணிக்கை 7–ல் இருந்து 8–ஆக அதிகரித்துள்ளது. தாலுக்காக்கள் அதிகரித்துள்ளதாலும், மாவட்டத்தின் தலைநகர் வெகுதொலைவில் இருப்பதாலும் கடலூர் மாவட்டத்தை 2–ஆக பிரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

Read more »

வெள்ளி, ஆகஸ்ட் 23, 2013

கடலூர் மாவட்டத்தில் அரசு தட்டச்சு தேர்வு நடைபெறும் தேர்வு மையங்கள் விபரம்

கடலூர்:

அரசு தட்டச்சு தேர்வு தமிழகத்தில் வரும் 31ம் தேதி 96 மையங்களில் நடக்கிறது.

தமிழக அரசின் தொழில் நுட்பக் கல்வித்துறை மூலமாக நடத்தப்படும் தட்டச்சு தேர்வு வரும் 31ம் தேதி மாநிலத்தில் 96 மையங்களில் நடக்கிறது. அதில் வரும் 31ம் தேதி தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலைத் தேர்வுகள் 4 அணிகளாகவும், செப்டம்பர் 1ம் தேதி இளநிலை தேர்வில் 5வது அணியும், முதுநிலைத் தேர்வு மூன்று அணிகளாக நடக்கிறது. அன்றைய தினமே உயர் வேகத் (ஹை ஸ்பீடு) தேர்வு மற்றும் 6ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான புகுமுக இளநிலைத் தேர்வு நடக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் 

1. கடலூர் கிருஷ்ணசாமி பாலிடெக்னிக் கல்லூரி, 
2. சிதம்பரம் முத்தையா பாலிடெக்னிக் கல்லூரி, 
3. நெய்வேலி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி, 
4. விருத்தாசலம் அரசு செராமிக் கல்லூரி 

ஆகிய நான்கு மையங்களில் இத்தேர்வு நடக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில், 

விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி,
திண்டிவனம் பி.வி.பாலிடெக்னிக் கல்லூரியிலும், 

புதுச்சேரியில், 

1. புதுச்சேரி மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் 
2. அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி 

ஆகிய மையங்களில் இத்தேர்வு நடக்கிறது.

இத்தேர்வை 6ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் புகுமுக இளநிலை தட்டச்சு தேர்வும், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இளநிலைத் தேர்வும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதுநிலைத் தேர்வும், தட்டச்சில் முதுநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் "ஹை
ஸ்பீடு' தேர்வு எழுதுகின்றனர்.

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்கள் அடிப்படை வசதிகள் சரியாக இல்லை என கோரி சாலை மறியல்

விருத்தாசலம்: 

விருத்தாசலத்தில் உணவு பாத்திரத்துடன் சாலையில் அமர்ந்து அரசு கல்லூரி ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி ரோட் டில் அரசு கல்லூரி மாணவர்கள் ஆதிதிராவிடர் நல விடுதி உள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று காலையில் விடுதியில் சமைத்த உணவை பாத்திரத்துடன் எடுத்து வந்த மாணவர்கள் விருத்தாசலம்- ஆலடி ரோட்டில் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த விருத்தாசலம் ஆதிதிராவிடர் நல தாசில்தார் சையத் ஜாபர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கடந்த 10 நாட்களாக விடுதியில் உணவு சரிவர வழங்கப்படவில்லை என்றும், சமைத்த உணவுகளில் பூச்சி இருந்ததாகவும், இது குறித்து வார்டனிடம் கேட்ட போது சரியாக பதில் அளிக்கவில்லை என்றும், கழிவறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக இல்லை என்றும் மாணவர் கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். பின்னர் தாசில்தார் சையத் ஜாபர் இது சம்பந்தமாக விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் பேரில் மாணவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றன

Read more »

வியாழன், ஜூன் 20, 2013

சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 21-ம் தேதி தொடக்கம்

சிதம்பரம்:

  சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற ஜூன் 21-ம் தேதி முதல் ஜூலை 2-ம் தேதி வரை நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் மு.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

 கலந்தாய்வு விவரம்:

 ஜூன் 21-ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கு (மாற்றுத் திறனாளி, விளையாட்டுத் திறன், முன்னாள் ராணுவத்தினர் வாரிசு, இலங்கை அகதி, மலைவாழ் பிரிவினர்), 24-ம் தேதி பி.எஸ்சி. கணிதம், கணினி அறிவியல், 25-ம் தேதி- பி.எஸ்சி. இயற்பியல், பொதுவேதியியல், 26-ம் தேதி -பி.எஸ்சி. தொழிற் வேதியியல், விலங்கியல், தாவரயியல் 27-ம் தேதி- பி.ஏ. தமிழ், ஆங்கிலம், ஜூலை 1-ம் தேதி- பி.காம்., பி.பி.ஏ., ஜூலை 2-ம் தேதி- பி.ஏ. பொருளியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள்.

 மேற்கண்ட பாடப்பிரிவுகளில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம் தவிர ஏனைய பாடப்பிரிவுகளில் முதல் கட்ட கலந்தாய்வில் பிளஸ் 2 தேர்வின் பகுதி-3-ல் 800க்கு மேலும், தமிழ் பாடப்பிரிவிற்கு பகுதி-3-ல் சிறப்புத் தமிழ் படித்தவர்கள் அல்லது பகுதி-1 தமிழில் 120-க்கும் மேலும், பி.ஏ. ஆங்கில பாடப் பிரிவுக்கு பகுதி-2 ஆங்கிலத்தில் 120-க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் மு.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Read more »

புதன், ஜூன் 19, 2013

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 24ம்தேதி முதல் தொடக்கம்

விருத்தாசலம், : 

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரியில் இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 24ம்தேதி முதல் தொடங்குகிறது.

கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் 2013&14ம் கல்வி  ஆண்டிற்கான பட்டப்படிப்பில் சேருவதற்கு  கலந்தாய்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன்படி 24ம்தேதி காலை சிறப்பு பிரிவில் மாற்றுத்திறனாளி, விளையாட்டுத்திறன், முன்னாள் ராணுவத்தினர் வாரிசு, இலங்கை அகதி ஆகியோருக்கும், மறுநாள் 25ம்தேதி பி.ஏ. ஆங்கிலம் பட்டப்படிப்புக்கும், 26ம்தேதி பிஎஸ்சி கணிதம், கணினி அறிவியல், 27ந்தேதி பிஎஸ்சி இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பட்டப்படிப்புகளுக்கும், ஜூலை 1ம்தேதி பி.ஏ. தமிழ், பி.காம்., 2ம்தேதி பி.ஏ.வரலாறு பாடப்பிரிவுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

கலந்தாய்வுக்கு மாணவர்கள் அவர்களது பெற்றோருடன் வரவேண்டும். மேலும் ஒவ்வொரு சான்றிதழுக்கும் 3 நகல்களை எடுத்து வருவதுடன், மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பு கட்டணம் ரூ. 50 செலுத்த வேண்டும். 2ம்தேதி நடைபெறும் மாணவர் சேர்க்கைக்குப் பின், வேறு பாடப்பிரிவுக்கு மாறுதல் பெற இயலாது. இதில் கல்வி கட்டணமாக பி.ஏ., பி.காம் பட்டப்படிப்புகளுக்கு ரூ. 1,605, பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ரூ.1,625ம்,  பி.எஸ்.சி. கணினி, அறிவியல் பட்டப்படிப்பிற்கு ரூ. 1025 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கல்லூரி முதல்வர் கோவிந் தன் தெரிவித்துள்ளார்.

Read more »

சனி, ஜூன் 01, 2013

Seven girls in Cuddalore district have scored State ranks in SSLC Exam

 A total of seven girls in Cuddalore district have scored State ranks as follows:

 R. Sridurga (498/500) of Venus Matriculation Higher Secondary School at Chidambaram,
 A. Aarthi (497) of S.D. Eden Mat.HSS at Vadalur, 
C.A. Nila (497) of Cluny Mat.HSS at Neyveli, 
S.D. Pavithra (497) of St Mary’s Mat.HSS at Cuddalore, 
S.H. Jesima (496) of Cluny Mat.HSS at Neyveli, 
S. Sangeetha (496) of Krishnasamy Mat.HSS at Cuddalore
 and
 L.S. Vasumithra (496) of Nirmala Mat.HSS at Chidambaram.

They were all honoured by the district administration and Chief Educational Officer C. Joseph Antony Raj. State second rank holder A. Aarthi aspires to become a doctor so as to render efficient health care services.

For Aarthi her parents, C. Asokan serving as an appraiser in the Vikkiravandi branch of Indian Bank and A. Shyamala a home maker, have been a constant source of inspiration.

The toppers in the government schools are as follows:

 M. Maheswari (492) of Bhuvanagiri Government Girls’ Mat.HSS,
 A. Hemavathi (489) of Thirupadiripuliyur Govt.Girls’ Mat.HSS,
 K. Priyadharshini (489) of Thittakudi Govt.Girls’ Mat.HSS and 
 P. Banu (488) of Thookkanambakkam Govt.Girls’ Mat.HSS.

The high-scorers in the government aided schools are as follows:

 S. Shanmugapriya (495) of SRKV Mat.HSS at Chidambaram, 
G. Kaviya (495) of St. Mary’s Mat.HSS at Cuddalore, 
T. Arun (494) of St. Joseph’s Mat.HSS at Manjakuppam, 
R. Abhinaya (494) of Aruna Mat.HSS, and
 V. Arun (493) of Aruna Mat. HSS at Eraiyur.

According to Chief Educational Officer C. Joseph Antony Raj as many as 73 schools in the district have scored cent per cent results. 

The number of students who have scored centum is as follows:

Tamil – Nil, 
English – 1, 
mathematics – 688, 
science – 1,379 and 
social science – 726. 

Cuddalore district has attained 75.21 per cent of results in the recently conducted SSLC examinations. Of the total number of 40,237 candidates appeared for the examinations 30,245 came out successfully. However, 13 others schools have scored less than 40 per cent results. He has noted with concern that Annai Sathya Higher Secondary School at Periyakumatti and Vannankudi government higher secondary schools have drawn a blank as none of their students got through.

Read more »

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வடலூர் எஸ்.பி. ஈடன் பள்ளி மாணவி ஆர்த்தி 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம்





நெய்வேலி:

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று 31/05/2013 வெளியிடப்பட்டன. கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள எஸ்.பி. ஈடன் பள்ளி மாணவி ஆர்த்தி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 497 மதிப்பெண் பெற்றுள்ளார். மாநில அளவில் 2-ம் இடத்தை பிடித்துள்ளார். 

அவர் பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு-

தமிழ்-99

ஆங்கிலம்-99

கணிதம்-99

அறிவியல்-100

சமூக அறிவியல்-100

மொத்தம்-497.

மாணவி ஆர்த்தி வடலூர் புதுநகர் பகுதியில் வசிக்கிறார். அப்பா அசோகன் இந்தியன் வங்கியில் நகை ஆய்வாளர். அம்மா சியாமளா. 

மாணவி ஆர்த்தி கூறியது:-
நான் சிறு வயது முதல் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் படித்து வந்தேன். தேர்வில் அதிகமதிப்பெண் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். தலைமை ஆசிரியை சுகிதா மற்றும் ஆசிரியர்கள் அதிக ஊக்கம் அளித்தனர். இதனால் அதிக மதிப்பெண் பெற்றேன். டாக்டருக்கு படித்து பொதுமக்களுக்கு சேவை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார். மாணவி ஆர்த்திக்கு பரதநாட்டியம் மற்றும் விளையாட்டில் ஆர்வம் உண்டு.

Read more »

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட அளவில் மாணவிகளே முதல் 3 இடங்களையும் பிடித்து சாதனை








கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் மாணவிகளே முதல் 3 இடங்களையும் பிடித்து சாதனை புரிந்துள்ளனர். 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.

மாணவிகளுக்கு பரிசு

நேற்று ( 31/05/2013 ) வெளியிடப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகளில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி துர்கா மாநில அளவில் முதல் இடத்தையும், மாணவிகள் ஆர்த்தி, நிலா, பவித்ரா ஆகியோர் 2–வது இடத்தையும், மாணவிகள் ஜெசிமா, சங்கீதா, வசுமித்ரா ஆகியோர் 3–வது இடத்தையும் பிடித்தனர்.

சாதனை புரிந்த மாணவிகள் அனைவரும் நேற்று காலையில் தங்கள் பெற்றோர் மற்றும் பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர்களுடன் கடலூர் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்துக்கு வந்தனர். கலெக்டர் கிர்லோஷ்குமார் விடுமுறையில் சென்று இருப்பதால் அவருக்கு பதிலாக கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகனசந்திரன் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார். உடன் முதன்மை கல்வி அதிகாரி ஜோசப்அந்தோணிராஜ், சமூகபாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஜெயச்சந்திரன், முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக முதன்மை கல்வி அதிகாரி ஜோசப் அந்தோணிராஜ் அளித்த பேட்டி 

நல்ல தேர்ச்சி விகிதத்தை கொடுப்போம்

கடலூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் ஒரு மாணவி முதல் இடத்தையும், 3 மாணவிகள் 2–வது இடத்தையும், 3– மாணவிகள் 3–வது இடத்தையும் பிடித்து சாதனை புரிந்துள்ளனர். கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வித்துறை முதன்மை செயலாளரின் வழிகாட்டுதல் படி, பள்ளி கல்வி இயக்குநரின் ஆலோசனையின் பேரில் சமச்சீர் கல்வியில் புதிய பாடங்கள் புகுத்தப்பட்டதன் காரணமாக மாநில அளவில் 3 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 75 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டைக்காட்டிலும் 6 சதவீதம் குறைவாகும். அடுத்த ஆண்டு இதை ஆண்டு நல்ல தேர்ச்சி விகிதத்தை கொடுப்போம். அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

7 ஆண்டுகளுக்கு பிறகு

எஸ்.எஸ்.எல்.சி.பொதுத் தேர்வை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களில் ஏதாவது ஒரு மாணவர் இடம் பிடிப்பார். ஆனால் எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் இந்த ஆண்டு 7 மாணவிகள் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை புரிந்துள்ளனர். இதில் ஒருவர் கூட மாணவர் இல்லை. அதேபோல மாவட்ட அளவில் மாணவர்களை விட மாணவிகள்தான் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் கடலூர் மாவட்ட மாணவ, மாணவிகள் யாரும் மாநில அளவில் இடம் பிடிக்கவில்லை. 1, 2 மார்க்குகளில் கோட்டை விட்டவர்களும் உண்டு. ஆனால் இந்த ஆண்டு மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களையும் மாணவிகள் பிடித்து இருப்பது கடலூர் மாவட்டத்துக்கு பெருமையாக இருக்கிறது.  இதற்கு முன்பு கடந்த 2006–ம் ஆண்டு கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஒருவர் மாநில அளவில் 3–வது இடத்தை பிடித்தார். அதன் பின்னர் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் 7 மாணவிகள் மாநில அளவில் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளனர் என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Read more »

வெள்ளி, மே 10, 2013

பிளஸ்–2 தேர்வில் கடலூர் மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள் விபரம்

கடலூர்

நடந்து முடிந்த பிளஸ்–2 தேர்வில் கடலூர் மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

கடலூர் மாணவன் சாதனை

பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் கடலூர் மாவட்டத்தில் தமிழை முதல் பாடமாக எடுத்து படித்த மாணவர்களில் கடலூர் ஏ.ஆர்.எல்.எம். பள்ளி மாணவன் கிரிதரன் 1200–க்கு 1180 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். அவர் பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:– தமிழ்– 192, ஆங்கிலம் – 192, இயற்பியல்– 197, வேதியியல்– 198, கணிதம்– 200, கணினி அறிவியல்– 200, மொத்த மதிப்பெண்கள்– 1180.

மாவட்டத்தில் முதலிடம் பெற்ற கிரிதரன் கூறுகையில், 

நான் கடலூர்  கூத்தப்பாக்கம் அண்ணாநகரில் வசித்து வருகிறேன். எனது தந்தை ரகுராமன், தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். தாய் ஜெயஸ்ரீ. எல்.ஐ.சி.யில் வேலை செய்கிறார். நான் அதிக மதிப்பெண்கள் பெறுவேன் என்று எதிர்பார்த்தேன். அதன்படி மாவட்டத்தில் முதலிடம் பிடித்து விட்டேன். வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பேன். ஆனால் தேர்வு நேரத்தில் தொலைக்காட்சியை பார்ப்பதை தவிர்த்து விட்டேன். இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பேன். தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் எதிலும் வெற்றி பெறலாம்.

நான் அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கு என்னுடைய பெற்றோர், சகோதரர், ஆசிரியர்கள் ஊக்குவித்தனர். அடுத்ததாக என்ஜினீயரிங் படிக்க ஆசை. சிவில் அல்லது மெக்கானிக் என்ஜினீயரிங் படிப்பேன் என்றார். முன்னதாக முதலிடம் பிடித்த மாணவன் கிரிதரனை பள்ளி முதல்வர் ராஜயோககுமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

மாவட்டத்தில் 2–வது இடம்

பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி டி.லாவண்யா 1200–க்கு 1178 மதிப்பெண்கள் பெற்று கடலூர் மாவட்டத்தில் 2–ம் இடத்தை பிடித்துள்ளார். பாடம் வாரியாக அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விவரம் வருமாறு:– தமிழ்– 193, ஆங்கிலம்–192, கணிதம்–199, வேதியியல்–200, உயிரியல் –200, இயற்பியல்–194. லாவண்யாவின் பெற்றோர் திருவேங்கடம்– சுதா. 

இது பற்றி மாணவி லாவண்யா கூறுகையில், 

நான் மாவட்ட அளவில் முதலிடம் பெறவேண்டும் என்கிற எண்ணத்துடன் படித்து வந்தேன். எனது வெற்றிக்கு பெற்றோர், ஆசிரியர்கள் தான் காரணம். இதற்காக நான் பள்ளிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இரவு 11 மணி வரை பாடங்களை படிப்பேன். டி.வி.யில் செய்தி மட்டுமே பார்ப்பேன். சினிமா படங்களை பார்க்க மாட்டேன். நான் டாக்டராகி ஏழை மக்களுக்காக சேவை செய்வேன் என்றார்.

சிதம்பரம் மாணவி

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவி அபிநயா 1176 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் 3–ம் இடத்தையும், பள்ளியில் முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். மாணவி அபிநயா பாடம் வாரியாக எடுத்த மதிப்பெண்கள் விவரம் வருமாறு:–

தமிழ்–191, ஆங்கிலம் –192, கணிதம் – 197, இயற்பியல்–196, வேதியியல் – 200, உயிரியல்–200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி அபிநயாவை பள்ளி தலைமை ஆசிரியை சக்தி சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து பாராட்டினார்.

ஏழை மக்களுக்கு சேவை செய்வேன்

இது பற்றி மாணவி அபிநயா நிருபர்களிடம் கூறுகையில், 

எனது தந்தை தனசேகர். கடலூர் வேளாண்மை உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். தாய் சுந்தரி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். நான் 10–ம் வகுப்பு பொது தேர்வில் 489 மதிப்பெண்கள் பெற்று கடலூர் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தேன். அன்று முதல் பிளஸ்–2 தேர்வில் மாநில அளவில் இடம்பிடிக்க திட்டமிட்டு படிக்க தொடங்கினேன். ஆனால், என்னால் மாவட்டத்தில் 3–ம் இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. இது எனக்கு வருத்தமாக இருந்தாலும், என்னுடைய ஆசையான மருத்துவப்படிப்பிற்குரிய கட்–ஆப் மார்க் கிடைத்துள்ளதால் சந்தோஷமாக உள்ளேன். கடினமாக படித்ததால் இவ்வளவு மதிப்பெண் பெறமுடிந்தது. நான் பெரும்பாலும் இரவு நேரத்தில் மட்டுமே படிப்பேன். வீட்டில் டி.வி. பார்க்காமல் எனது பெற்றோர் கூறியபடி படித்து அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளேன். நான் மருத்துவ பிரிவில் இருதய டாக்டராகி ஏழை மக்களுக்கு சேவை செய்வேன் என்றார்

Read more »

கடலூர் மாவட்ட அளவில் பிளஸ் 2 தேர்வில் ஏ.ஆர்.எல்.எம். மேல்நிலைப் பள்ளி மாணவர் கிரிதரன் 1,180 மதிப்பெண் பெற்று முதலிடம்

கடலூர் ஏ.ஆர்.எல்.எம். மேல்நிலைப் பள்ளி மாணவர் கிரிதரன் 1,180 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். 

பாடவாரியாக மதிப்பெண் விவரம் 

தமிழ் 192, 
ஆங்கிலம் 192, 
இயற்பியல் 197, 
வேதியியல் 199, 
கணிதம் 200, 
கணிப்பொறி அறிவியல் 200. 

இவரது தந்தை ரகுராமன், வங்கிப் பணியாளர். தாய் ஜெயஸ்ரீ, எல்.ஐ.சி. ஊழியர்.
முதலிடம் பிடித்த மாணவரை முதல்வர் ராஜயோககுமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். சிவில் என்ஜீனியரிங் படிக்க விரும்புவதாக பிளஸ் 2 தேர்வில் கடலூர் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் தெரிவித்தார்.

Read more »

புதன், மே 08, 2013

கடலூர் மாவட்டத்தில் 2 மாதங்களில் 3,731 போலி ரேசன் கார்டுகள் கண்டுபிடிப்பு

  கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களில் 3 ஆயிரத்து 731 போலி ரேசன்கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அரசு உத்தரவு

தமிழகத்தில் போலி ரேசன்கார்டுகள் புழக்கத்தில் உள்ளதால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. ஏனெனில் ஒவ்வொரு ரேசன்கார்டுக்கும் உணவுப்பொருள் மானியமாக ஆண்டுக்கு 2 ஆயிரத்து 880 ரூபாயை அரசு வழங்குகிறது.

இதுதவிர விலையில்லா பொருட்கள், மானிய விலையில் கியாஸ் சிலிண்டர்கள் என பல்வேறு சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்குகிறது. இதனால் போலி ரேசன்கார்டுகளால் அரசின் பணம் வீணடிக்கப்படுவதால், அனைத்து மாவட்டங்களிலும் புழக்கத்தில் உள்ள போலி ரேசன்கார்டுகளை கண்டறிந்து ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

போலிகார்டுகள் கண்டுபிடிப்பு

அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் போலி ரேசன் கார்டுகளை கண்டறியும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த மார்ச், ஏப்ரல் ஆகிய இரு மாதங்களில் 3 ஆயிரத்து 731 போலி ரேசன் கார்டுகளை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதில் சிதம்பரம் தாலுகாவில் அதிகபட்சமாக 902 போலி ரேசன்கார்டுகளை வட்டவழங்கல்துறை அதிகாரிகள் கண்டு பிடித்து, அரசுக்கு ஏற்பட்டு வந்த இழப்பை தடுத்துள்ளனர். இது தவிர விருத்தாச்சலம் தாலுகாவில் 593 போலி ரேசன்கார்டுகளும், திட்டக்குடி தாலுகாவில் 534 போலி ரேசன்கார்டுகளும், குறிஞ்சிப்பாடி தாலுகாவில் 493 போலி ரேசன்கார்டுகளும், கடலூர் தாலுகாவில் 332 போலி ரேசன்கார்டுகளும், பண்ருட்டி தாலுகாவில் 306 போலி ரேசன்கார்டுகளும், காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் 241 போலி ரேசன்கார்டுகளும், பறக்கும் படை தாசில்தாரால் 329 போலி ரேசன்கார்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

60 நாட்கள் கால அவகாசம்

இந்த கார்டுகளுக்கான உணவு பொருட்கள் ஒதுக்கீட்டை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர். இதில் உண்மையான கார்டுகள் ஏதும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் அந்த பகுதி வட்ட வழங்கல் அலுவலகத்தில் மேல்முறையீடு செய்ய 60 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்துக்குள் மேல்முறையீடு செய்யாதவர்களின் கார்டுகளை ரத்து செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. மேல் முறையீடு செய்பவர்களின் கார்டுகளை மட்டும் அதிகாரிகள் ஆய்வு செய்து தகுதி அல்லது தகுதியின்மைக்கு தக்கவாறு உரிய உத்தரவுகள் பிறப்பிப்பார்கள்.

Read more »

புதன், ஜனவரி 09, 2013

கடந்தாண்டில் கடலூர் மாவட்டத்தில் நடந்த 3,484 சாலை விபத்துகளில் 548 பேர் இறந்துள்ளனர்

கடலூர் முதுநகர் :

         சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் மாவட்டத்தில் சாலை விபத்துகளும், அதில் உயிரிழப்போர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்தாண்டில் மாவட்டத்தில் நடந்த 3,484 விபத்துகளில் 548 பேர் இறந்துள்ளனர்.

         மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 340 கி.மீ., மாநில நெடுஞ்சாலை 1,816 கி.மீ., பிற சாலைகள் 5,511 கி.மீ., என மொத்தம் 7667 கி.மீ., தூர சாலைகள் உள்ளன. ஆனால், மாவட்டத்தில் போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள போதிலும், பாதுகாப்பான முறையில், போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்டுவது குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.

              இதன் காரணமாகவே, மாவட்டத்தில் சாலை விபத்துகளும், அதனால் உயிர் இழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 2008ம் ஆண்டில் 2,896 விபத்துகளில் 450 பேரும், 2009ல் 2,811 விபத்துகளில் 483 பேரும், 2010ம் ஆண்டில் 2,695 விபத்துகளில் 466 பேரும், 2011ல் 3,092 விபத்துகளில் 523 பேர் இறந்தனர். பெருகி வரும் சாலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தவிர்த்திட தமிழக அரசு ஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா நடத்தி வருகிறது. அதன்படி போக்குவரத்து துறை சார்பில் கடந்த 1ம் தேதி முதல் சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

         இறுதி நாளான  கடலூர், கேப்பர் மலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.  முகாமை வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் துவக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், முருகேசன், காளியப்பன், நல்லத்தம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் கூறியது:

               மாவட்டத்தில் கடந்த 2010ம் ஆண்டு 2,695 விபத்துகள் நடந்துள்ளன. இதில்,உயிரிழப்பை ஏற்படுத்திய447 விபத்துகளில் 466 பேர் இறந்துள்ளனர்.  3,453 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டில் மொத்தம் நடந்த 3,092 விபத்துகளில், உயிரிழப்பை ஏற்படுத்திய 498 விபத்துகளில் 523 பேர் இறந்துள்ளனர். 3,790 பேர் காயமடைந்துள்ளனர். கடந்தாண்டு 3,484 விபத்துகள் நடந்துள்ளன. அதில், உயிரிழப்பை ஏற்படுத்திய 524 விபத்துகளில் 548 பேர் இறந்துள்ளனர். 4,938 பேர் காயமடைந்துள்ளனர்.

          சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததாலும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதன் காரணமாக அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை தவிர்த்திட வட்டார போக்குவரத்து துறையினர் அவ்வப்போது போலீசாருடன் இணைந்து வாகன சோதனை நடத்தி வருகிறோம். குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி கடந்தாண்டு குடிபோதையில் வாகனம் ஒட்டி விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக 5 பேரின் ஒட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 46 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

          வாகன உரிமம், ஓட்டுனர் உரிமம் வழங்குதல், வாகன உரிமங்களை புதுப்பித்தல் போன்ற பல்வேறு பணிகளின் மூலம் கடந்தாண்டு 61.92 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மேலும், பதிவு பெறாத வாகனங்களுக்கு அபராதம், நிர்ணய அபராதம் போன்றவற்றின் மூலம் 1.36 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior