சிதம்பரம், டிச. 1:
சிதம்பரம் அண்ணா கலையரங்கம் வளாகத்தில் தொடங்கப்பட்ட உழவர் சந்தை இயங்காமல் உள்ளது குறித்து தினமணியில் கடந்த மாதம் 4-ம் தேதி படங்களுடன் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதன் எதிரொலியாக கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் உழவர் சந்தையை மீண்டும் இயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிதம்ப ரம் நகரில் அண்ணா கலையரங்கம் வளாகத்தில் 2000-ம் ஆண்டு ஆகஸ்டு 9-ம் தேதி வேளாண் விற்பனைத் துறையினரால் உழவர்சந்தை தொடங்கப்பட்டது. அப்போதைய மத்திய பெட்ரோலிய இணை அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.பொன்னுசாமி தலைமையில் தமிழக வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் இந்த உழவர் சந்தையை திறந்து வைத்தார்.
அதே வளாகத்தில் ரூ.11 லட்சம் செலவில் பொருளீட்டு கிடங்கும், ரூ.2.75 லட்சம் செலவில் உளர்களமும் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டியதோடு சரி இன்று வரை கிடங்கும், உலர்களமும் அமைக்கப்படவில்லை. மொத்தம் 28 கடைகளுடன் உழவர் சந்தை தொடங்கப்பட்டு சில மாதங்களே இயங்கியது. ஊர் எல்லையில் உள்ளதால் பொதுமக்கள் யாரும் வாங்க வராததால் வியாபாரிகள் உழவர் சந்தைக்கு வருவதை நிறுத்தி விட்டனர். அன்றிலிருந்து 9 ஆண்டுகளாக உழவர்சந்தை இயங்காமல் உள்ளது.÷தற்போது ஆட்சியரின் கண்டிப்பான உத்தரவின் பேரில் சிதம்பரம் உழவர் சந்தையில் திங்கள்கிழமை முதல் 5 கடைகள் அமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் இயங்கின. மேலும் கூடுதலான கடைகளை அமைக்க வேளாண் வணிக துணை இயக்குநர் தனவேல் உழவர் சந்தையை திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். வேளாண் அலுவலர்கள் சித்ரா, அமுதா, வேலு, கலியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக