நெய்வேலி, டிச. 1:
வள்ளலார் வாழ்ந்த வடலூரில் அரசுக் கிளை நூலகம் போதிய அடிப்படை வசதிகளின்றி கடந்த 29 ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருவது அப்பகுதி புத்தக விரும்பிகளை பெரிதும் கவலையடையச் செய்துள்ளது.
கடலூர்-விருத்தாசலம் சாலை மார்க்கத்தில் வடலூர் வள்ளலார் தருமச்சாலை பஸ் நிறுத்தம் அருகே ஒரு வாடகைக் கட்டடத்தில் 240 சதுர அடி பரப்பளவில் இயங்கி வருகிறது அரசு கிளை நூலகம். இந்த நூலகத்தில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான 15 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.
இ ரண்டு கடைகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு அதில் ஒரு கடை வாசகர்கள் படிப்பதற்கும், மற்றொரு கடை புத்தகங்கள் வைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நூலகத்தில் கணினி பயன்பாடு கூட கிடையாது. தொலைபேசி வசதியும் கிடையாது.
இந்த நூலகத்தில் ஒரே சமயத்தில் 10 பேர் மட்டுமே அமர்ந்து படிக்கமுடியும். இதனால் இந்த நூலகத்துக்கு வரும் வாசகர்கள் போதிய இடவசதி இல்லாததால், மந்தாரக்குப்பம் மற்றும் நெய்வேலி நூலகங்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ÷வள் ளலார் வாழ்ந்த வடலூர் மாநில அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் முயற்சியால் நாளுக்குநாள் வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால் அறிவையும், நல்ல பண்புகளையும் வளர்க்கக் கூடிய நூலகம் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது வேதனையடையவைக்கிறது.÷இதுகுறித்து மாவட்ட மைய நூலகர் அசோகன் கூறியது:
சரியான இடம் கிடைக்காததால் வடலூர் நூலகம் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இடம் தேர்வு செய்துகொண்டிருக்கிறோம்.
வடலூர் பேரூராட்சி செயல் அலுவலரிடமும் இடம் தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளோம்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியக் கல்விக் குழு உறுப்பினர் சிவக்குமார், நூலக வளர்ச்சிக்காக பெரிதும் உதவிவருகிறார். இடம் தேர்வான உடன் ரூ.15 லட்சம் மதிப்பில் அனைத்து வசதிகளுடன் நூலகம் செயல்படும் என்றார் அசோகன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக