பண்ருட்டி:
நூறுநாள் வேலை திட்டத்தின்கீழ் வேலையும், அதற்கான அடையாள அட்டையும் வழங்கப்படாததால், எஸ்.புதுக்குப்பம் கிராம மக்கள் பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
பண்ருட்டி வட்டம் சிலம்பிநாதன்பேட்டை ஊராட்சியை சேர்ந்த எஸ்.புதுக்குப்பம் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் தங்களுக்கு அடையாள அட்டையும், வேலையும் இதுநாள் வரை வழங்கப்படவில்லை என்று கூறி இக் கிராம மக்கள் சுமார் 100 பேர், வன்னிய சங்க மாவட்டச் செயலர் சக்திவேல் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, ""இதுவரை எனக்கு விண்ணப்பங்கள் வரவில்லை. உங்கள் விண்ணப்பங்கள் வந்திருந்தால் அடையாள அட்டையும் வேலையும் வழங்கப்பட்டிருக்கும்'' என்றார். இதற்கு கிராம மக்களின் சார்பில் பேசிய சக்திவேல், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னரே பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் புகைப்படங்களை ஊராட்சி எழுத்தர் வெங்கடேசனிடம் கொடுத்துள்ளோம் என்றனர். இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய துணை வட்டார வளர்ச்சி அலுவலர், புதிய விண்ணப்பங்கள் அளித்து அதை பூர்த்திசெய்து புகைப்படத்துடன் அளிக்குமாறு கூறினார். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக