தமிழகத்தில் மின் சிக்கனத்தைக் கருத்தில் கொண்டு குண்டு பல்புகளுக்கு பதிலாக, குழல் விளக்குகளை பயன்படுத்தும் திட்டம், கடலூரில் துவக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் திட்டத்தை செயல்படுத்தினால் 600 மெகாவாட் வரை மின்சாரம் சிக்கனமாகும்' என, தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக மின்வாரியம் 10 ஆயிரத்து 214 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டுள்ளது. திறனை 13 ஆயிரத்து 638 மெகாவாட்டாக உயர்த்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. 47 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பல திட்டங்கள் நிறைவடைய உள்ளன. எதிர்கால தேவையை, மின் சேமிப்பின் மூலம் சரிகட்ட முயற்சி நடத்து வருகிறது. அரசு அலுவலகங்களில் 10 முதல் 20 சதவீதம் வரை மின் தேவையைக் குறைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு அலுவலகங்கள், சார்பு அலுவலங்களில் குமிழ் விளக்குகளுக்கு (குண்டு பல்புகள்) தடை செய்யப்பட்டுள்ளது.
குறைந்த விலையுடைய குண்டு பல்புகளால் 75 சதவீதம் எரிசக்தி, வெப்பமாக விரயமாகிறது. குழல் விளக்குகள்தான் இதற்கு சரியான மாற்று என்றாலும், அதிக விலையால் குழல் விளக்குகளை மக்கள் பயன்படுத்த முடிவதில்லை. இதைக் கருத்தில் கொண்டு, மத்திய எரிசக்தி திறனுக்கான செயலகம், "பச்சத் லேம்ப் யோஜனா' திட்டம் மூலம், குண்டு பல்புகளுக்கு பதிலாக, உயர்தர குழல் விளக்குகளை 15 ரூபாய்க்கு வழங்கும் மாற்றுத் திட்டம் வரையறுத்துள்ளது. இதற்கான விலை வித்தியாசத்தை, தூய்மை மேம்பாட்டு இயங்கமைப்பு திட்டம்' மூலம் சமன் செய்து கொள்வர்.
இத்திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மின் வாரியத்திற்கு, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 2.12 கோடி மின் நுகர்வோரில், 1.35 கோடி வீட்டு பயனீட்டாளர்கள் மின் மீட்டர் பொருத்தியுள்ளனர். முன்னோடியான குழல் விளக்கு வழங்கும் திட்டம், கடலூர் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள 4.5 லட்சம் வீடுகளுக்கு துவங்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பரில் இப்பணிகள் முடியும். இதன் மூலம் மின் தேவை 30 மெகாவாட் குறையும்.
தமிழகத்தில் 1.35 கோடி வீடுகளுக்கும் இதை செயல்படுத்தினால் 500 முதல் 600 மெகாவாட் வரை மின் தேவை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்டமாக 60 சதவீதம் பகுதிக்கு 8.2 லட்சம் வீட்டு பயனீட்டாளர்களுக்கு டிச., 2011ல் முடிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள 40 சதவீத பகுதிகளுக்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் விரைவில் துவங்கப்படும். இவ்வாறு தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக