சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் சீத்தாராமன் எச்சரிக்கை விடுத்தார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் மாணவர்களை ஏற்றிச் செல்லும் போது ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு, பள்ளி பிரதிநிதிகள், ஓட்டுனர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கடலூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன், முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி,வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார், கல்வி அலுவலர் பூங்கொடி, தொடக்கக்கல்வி அலுவலர் கணேசமூர்த்தி பங்கேற்று பேசினர்.
ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் பேசியது:
இந்தாண்டு பள்ளி வாகனங்கள் ஏதும் விபத்து இல்லாமல் இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சில பள்ளிகள் அரசின் உத்தரவை பின்பற்றவில்லை என ஆய்வுகளில் தெரிகிறது. எனவே மீண்டும் சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள வழிகாட்டுதலை 10 கட்டளைகளாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
இதில் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஓட்டுனர் பணியமர்த்துதல், அதிவேகம், கவனக்குறைவாக ஓட்டக்கூடாது, டிரைவர் சீருடை மற்றும் அடையாள அட்டை இருக்கவேண்டும், வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும், வாகனம் ஓட்டும் போது மொபைல் போனில் பேசக்கூடாது, வாகனத்தில் டேப்ரெக்கார்டர் வைக்கக்கூடாது, அனுமதியில்லாத வாகனத்தை பயன்படுத்த கூடாது, வாகனத்தில் கதவு பொருத்தியிருக்கவேண்டும், ஜன்னல்களில் கம்பி வலை அடித்திருக்கவேண்டும். இவற்றை அனைத்து பள்ளிகளும் பின்பற்றவேண்டும்.கடந்தாண்டு 1.1.2009முதல் இந்தாண்டு 1.9.2010 வரையில் 635 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
இதில் இந்தாண்டு 68 வாகனங்களில் அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றியுள்ளனர். ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள் வாகனம் ஓட்டியதாக 4 பேர் பிடிபட்டுள்ளனர்.கடந்தாண்டை விட இந்தாண்டு முன்னேற்றம் உள்ளது. ஆனால் வேண்டிய முன்னேற்றம் இல்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறியதாக 22 வாகனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற வாகனங்கள் வைத்திருக்கும் பள்ளிகளின் உரிமம் ரத்து செய்யப்படும். இந்தாண்டு தேசிய நெடுஞ்சாலையில் 139 பேரும், நெடுஞ்சாலையில் 122 பேரும் விபத்தில் இறந்துள்ளனர்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக