சிதம்பரம்:
ஈஷா அறக்கட்டளை சார்பில் கிராம புத்துணர்வு, பசுமை கரங்கள் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என மக்கள் தொடர்பு அதிகாரி சுவாமி ஏகா கூறினார்.
ஈஷா அறக்கட்டளை மக்கள் தொடர்பு அதிகாரி சுவாமி ஏகா கூறியதாவது:
மக்கள் மனதில் ஆன்மிக அலை உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் தமிழகம் முழுவதும் "ஆனந்த அலை மகா சத்சங்கங்கள்' நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் 16 நகரங்களில் நடத்த திட்டமிட்டு கடந்த மாதம் 26ம் தேதி மதுரையில் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் 24ம் தேதி மாலை 6மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அருளுரை வழங்குகிறார். அப்போது பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். சிதம்பரம் நகரை பசுமையாக்கும் விதத்தில் "பசுமை சிதம்பரம்' இயக்கத்தை மரக்கன்று நட்டு சத்குரு துவக்கி வைக்கிறார். நிகழ்ச்சிக்கு வரும் அனைவருக்கும் ஈஷா அறக்கட்டளை சார்பில் இலவசமாக 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனை கிராமங்கள் என கணக்கிட்டு அவர்களுக்கு தேவையான அளவில் மரக்கன்றுகள் கொடுத்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மரக்கன்று கொடுக்கும் போது அவர்களின் இருப்பிடம் மற்றும் விலாசம் எழுதிக்கொண்டு கொடுக்கிறோம். அவ்வப்போது எங்களின் தன்னார்வ தொண்டர்கள் கண்காணித்து உதவி செய்வார்கள். பட்டு போகும் சில மரங்களுக்கு மாற்று மரக்கன்றுகள் வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.இந்தியாவில் 200 ஈஷா யோகா மையங்களும், தமிழகத்தில் மட்டும் 120 மையங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக கிராம புத்துணர்வு திட்டம், பசுமை கரங்கள் திட்டம், ஈஷா வித்யா பள்ளிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறைந்த செலவில் தரமான கல்வி வழங்கும் விதமாக தமிழகத்தில் 7 பள்ளிகள் செயல்படுகிறது. மேலும் இவை விரிவுபடுத்தப்படும்.மகா சத்சங்கங்கள் நிகழ்ச்சியையொட்டி 23ம் தேதி சிதம்பரம் கீழவீதியில் இருந்து பல்கலைகழக மைதானம் வரை 2500 பேர் பங்கேற்கும் மாபெரும் பசுமை பேரணி நடக்கிறது. 25ம் தேதி காலை சிதம்பரம் அடுத்த மடவாப்பள்ளம் பகுதியில் உள்ள ஈஷா பள்ளியில் சத்குரு நேரடியாக சென்று மாணவர்களிடம் உரையாடுகிறார்.இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட அமைப்பாளர் பொன்னுதுரை, வெளிச்சம் சேகர், முத்து, தளபதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக