சேத்தியாத்தோப்பு :
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் கனமழை காரணமாக. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் கரும்பு மற்றும் நெற்பயிர்கள் தண்ணீரில் முழ்கியுள்ளன.
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. வாரச் சந்தை தினமான நேற்று சந்தை மைதானம் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. சேத்தியாத்தோப்பை சுற்றியுள்ள கத்தாழை, கரிவெட்டி, சோழத்தரம் குடிகாடு ஆகிய கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.
எரும்பூர், வளையமாதேவி, ஆனைவாரி, பின்னலூர், மிராளூர், மஞ்சக்கொல்லை, வாண்டையாங்குப்பம், ஓடாக்கநல்லூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு மற்றும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மழை நீருடன், என்.எல்.சி., சுரங்கத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரும் சேர்ந்து பரவனாறு வடிகால் வாய்க்கால் வழியாக வெளியேற்றப்படுவதால், சேத்தியாத்தோப்பை அடுத்த நெல்லிக்கொல்லை, துறிஞ்சிக்கொல்லை, மதுவானைமேடு கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
வீராணம் ஏரி, பெலாந்துறை அணை, மேமாத்தூர் அணை ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால் வெள்ள அபாயம் குறைந்துள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர். இருந்த போதும் மீண்டும் மழை துவங்கியுள்ளதால் மக்கள் எந்த நேரத்திலும், வெள்ளம் வரக்கூடும் என்ற அச்சத்துடன் உள்ளனர்.
குறிஞ்சிப்பாடி:
கடந்த இரண்டு நாட்களாக நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி பகுதிகளில் கனமழையாலும், நெய்வேலி என்.எல்.சி., சுரங்கத்திலிருந்து அளவிற்கு அதிகமாக தண்ணீர் கன்னியாக்கோயில் ஓடையின் வழியாக வெளியேற்றுவதால், ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாக்கோயில் ஓடை தண்ணீர் செங்கால் ஓடை வழியாக பரவனாற்றில் கலப்பதால் கன்னியாக்கோயில் ஓடை, செங்கால் ஓடை, பரவனாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக ஓடைகளில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு சேரக்குப்பம், எல்லப்பன்பேட்டை, அரங்கமங்கலம், அயன் குறிஞ்சிப்பாடி, கல்குணம், பூதம்பாடி, மருவாய், திருவெண்ணைநல்லூர் கிராமம், ஓணாங்குப்பம், அந்தராசிபேட்டை, ஆடூர் அகரம், குண்டியமல்லூர், கருங்குழி, கொளக்குடி ஆகிய கிராமங்களில் பெரும்பகுதி மழைநீர் ‹ழ்ந்துள்ளது. இப் பகுதியில் 3,000 ஏக்கர் பயிர்கள் மூழ்கின. இப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்ததால் வீடு இழந்தவர்கள் அந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக